ஒரு மரத்தில் அணில் ஒன்று தாவி விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறி கீழே நின்ற ஒநாயின் மீது விழுந்தது.
ஓநாய் அதை சாப்பிட நினைக்கையில் தன்னை விட்டு விடுமாறு அணில் கெஞ்சியது.
அப்போது ஓநாய், “நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன்னை விட்டு விடுகிறேன்” என்றது.
அணிலும், “உன் பிடியில் நான் இருந்தால் எப்படிப் பதில் சொல்ல முடியும்?” என்று கேட்க ஓநாயும் பிடியைத் தளர்த்தியது.
உடனே மரத்தில் தாவி ஏறிய அணில், “இப்போது உன் கேள்வியைக் கேள்” என்றது.
ஓநாய் கேட்டது, “உன்னை விட நான் பலசாலி. ஆனால், என்னை விட மகிழ்ச்சியாக மரத்தில் எப்போதும் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிறாயே! இது எப்படி சாத்தியம்?”
அணில், “நீ எப்போதும் கொடுமையான செயல்களையேச் செய்கிறாய். அதுவே உன் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது. அதனால், உன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. ஆனால், நான் எப்போதும் யாருக்கும் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. மரங்களில் தானாகப் பழுத்த பழங்களை மட்டுமே சாப்பிடுகிறேன். அதனால் என் மனதில் எப்போதும் கவலையில்லை”என்றது.