ஜென் குரு ஒருவர் தன சீடர்களுடன் ஒரு பாலைவனப் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
கடும் வெயில். ஒரு மரம் கூட இல்லை. ஒதுங்குவதற்கு எங்கும் இடமில்லை. நீர்நிலை எதுவும் தென்படவில்லை. குடிக்கத் தண்ணீர் கூடக் கிடைக்காததால் சீடர்கள் அனைவரும் சோர்வடைந்தனர்.
அதைப் பார்த்த குரு மாலை நேரம் ஆகிவிட்டதால் ஒரு இடத்தில் தங்கலாம் என்று சொன்னார்.
உடனே சீடர்கள் அனைவரும் சுருண்டு படுத்து விட்டனர்.
குரு உறங்கச் செல்லும் முன் தியானம் செய்வது வழக்கம்.
அன்றும் அவர் மண்டியிட்டபடியே, “இறைவா, தாங்கள் இன்று எமக்களித்த அனைத்திற்கும் நன்றி'' என்று கூறி வணங்கினார்.
பசியில் இருந்த ஒரு சீடனுக்கு உடனே கடுமையான கோபம் வந்தது.
எழுந்து உட்கார்ந்த அவன், “குருவே இன்று இறைவன் நமக்கு ஒன்றுமே அளிக்கவில்லையே?'' என்றான்.
சிரித்துக்கொண்டே குரு சொன்னார், “யார் அப்படிச் சொன்னது? இறைவன் இன்று நமக்கு அருமையான பசியைக் கொடுத்தார். அற்புதமான தாகத்தைக் கொடுத்தார். அதற்காகத்தான் அவருக்கு நன்றி செலுத்தினேன்''
இன்பமும் துன்பமும், வாழ்க்கை என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை ஞானிகள் உணர்ந்திருக்கின்றனர்.