ஞானம் தேடி ஒரு பெண் சமண ஆசிரமம் ஒன்றில் சேர்ந்தாள்.
அங்கு ஞானம் அடைவதற்கு முதல் படியாக, ''நீ உன்னையே உணர்வாயாக'' என்றனர்.
அது அவளுக்குப் புரியவில்லை, அவளுக்கு எப்படி போதிப்பது என்று அங்கிருந்தவர்களுக்கும் தெரியவில்லை.
ஒருநாள் அவள் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தபோது, காய்ந்த இலை ஒன்று மரத்திலிருந்து உதிர்வதைக் கண்டாள்.
அதையேப் பார்த்துக் கொண்டிருந்த அவள் திடீரென ஆடிப்பாட ஆரம்பித்தாள். அவள் ஞானம் அடைந்து விட்டாள்.
ஆசிரமத்தில் இருந்த மற்றவர்கள், ''என்ன படித்தீர்கள்? எந்த சாத்திரம் கற்று நீங்கள் ஞானம் அடைந்தீர்கள்?அதை எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள். நீண்ட காலமாக நாங்களும் என்னென்னவோ படித்தும் ஞானம் அடைய முடியவில்லை. ஆனால், நீங்கள் குறுகிய காலத்தில் எதையும் படிக்காமலேயே ஞானம் அடைந்து விட்டீர்களே!'' என்று கூறி ஆச்சரியப்பட்டனர்.
அந்தப் பெண் சொன்னாள், ''எதையும் படித்து நான் கற்றுக் கொள்ளவில்லை. மரத்திலிருந்து காய்ந்த இலை ஒன்று விழுவதைக் கண்டேன். என் ஆசை நிறைவேறி விட்டது''
மற்றவர்கள் சொன்னார்கள், ''நாங்களும்தான் மரத்திலிருந்து இலைகள் விழுவதைப் பார்க்கிறோம். அது உன்னை மட்டும் எப்படி பாதித்தது?''
அவள் சொன்னாள், ''ஒரு காய்ந்த இலை விழுவதைப் பார்த்ததும் என்னிலிருந்து ஏதோ கீழே விழுந்தது. இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது நானும் இந்த இலையைப் போல விழுந்துவிடுவேன் என்பதைப் புரிந்து கொண்டேன். பின் எதற்குப் பெருமை, கர்வம் எல்லாம்? காய்ந்த இலையைக் காற்று உதைத்து எல்லாத் திசைகளிலும் மாறி மாறி அடித்துச் செல்வதைக் கண்டேன். நாளை அது சாம்பலாகிவிடும். நானும் அந்த இலையைப் போன்றே அலைவேன். இன்றிலிருந்து நான் இங்கில்லை. இதை அந்த காய்ந்த இலையிலிருந்துதான் கற்றுக் கொண்டேன்''