நாய் ஒன்று தன இன நாய்களுக்குப் போதனை செய்து வந்தது.
கடவுள் தன் வடிவில் நாயைப் படைத்தார் என்று அது சொல்வதுண்டு. எல்லா நாய்களுக்கும் அதன் மீது ஒரு குருவுக்குள்ள மரியாதை உண்டு.
அந்த நாய் மற்ற நாய்களிடம் எப்போதும் குரைக்கக் கூடாது என்று போதனை செய்து வந்தது.
எந்த நாய் குரைப்பதைக் கண்டாலும் அந்த இடத்திலேயே அது குரைப்பது ஒரு பயனற்ற செயல் என்று போதிக்க ஆரம்பித்துவிடும்.
இந்த போதனை செய்பவர்களே இப்படித்தான்! எது ஒன்றை தவிர்க்க முடியாதோ அதைத்தான் செய்யக்கூடாது என்று வலியுறுத்துவார்கள்.
மற்ற நாய்களும் குரைப்பதைத் தவிர்க்க முயற்சித்தும் அவற்றால் முடியவில்லை.
எனவே, குற்ற உணர்வுடன் அவை ஒருநாள் ஒரு இடத்தில் கூடியபோது ஒரு நாய், ''நமது குரு சொல்வது உண்மை. குரைப்பது ஒரு தேவையற்ற செயல். அது நம் மரியாதையைக் குறைக்கிறது. எனவே நாம் நாளை ஒரு நாள் எங்காவது ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தாவது நாளை முழுவதும் குரைக்காமல் இருப்போம்''என்று சொல்ல அனைத்து நாய்களும் அதை ஆமோதித்தன.
மறுநாள் சொன்னதுபோல், நாய்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு குரைக்காமல் இருந்தன.
அப்போது அந்த குரு நாயானது வெளியே வந்தது.
அதற்கு ஒரே அதிசயம். எங்குமே குரைப்பு சப்தம் கேட்கவேயில்லை.
அதற்குத் தெரிந்து விட்டது, தமது சொல்லுக்கு எல்லா நாய்களும் மதிப்புக் கொடுத்துள்ளனவென்று.
அதே சமயம் அதற்கு ஒரு பயமும் வந்துவிட்டது. எல்லா நாய்களும் குரைக்கவில்லை என்றால் தனக்கு வேலை எதுவும் இருக்காதே, யாருக்கும் ஆலோசனை கூற முடியாதே என்ற அச்சம் ஏற்பட்டது.
அப்போது தனக்கேக் குரைக்க வேண்டும்போலத் தோன்றியது.
அருகில் நாய் எதுவும் இல்லாததால் தைரியமாக அது குரைத்தது.
அவ்வளவுதான், அடக்கிக் கொண்டிருந்த நாய்கள் அவ்வளவும் தங்களுக்குள் யாரோ கட்டுப்பாட்டை மீறி விட்டார்கள் என்ற தைரியத்தில் எல்லாம் ஒன்று சேரக் குரைத்தன.
இப்போது குருவான நாய்க்கும் மகிழ்ச்சி, இனிமேல் எல்லோருக்கும் புத்திமதி சொல்லலாம் என்று...
மற்ற நாய்களுக்கும் மகிழ்ச்சி, குரைப்பதை யாராலும் கட்டுப் படுத்த இயலாது, எப்போதும் போலக் குரைக்கலாம்என்று...