ஒரு விமானத்தில் ஒரு ஆணும் பெண்ணும் பயணம் செய்தனர்.
அந்த நபர் அந்த பெண்ணிடம் “ஒரு விளையாட்டு விளையாடலாமா?” என்று கேட்டார்.
களைப்பாக இருந்த பெண் நிராகரித்தார்.
அந்த நபர் விடுவதாக இல்லை “மிகவும் எளிமையான விளையாட்டு தான். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்பேன், உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் நீங்கள் 500 ரூபாய் தர வேண்டும்.அதே போல் நீங்களும் கேட்கலாம். நானும் தெரியவில்லை என்றால் 500 ரூபாய் தருகிறேன்” என்றார்.
அந்த பெண்மணி மீண்டும் மறுத்து விட்டார்.
“சரி உங்களுக்கு தெரியவில்லை என்றால் 500 ரூபாய் கொடுங்கள் . எனக்கு தெரியவில்லை என்றால் 5000 ரூபாய் தருகிறேன்” என்றார்.
“இவர் விட மாட்டார் போல” என்று எண்ணிக்கொண்டே சம்மதித்தார் அந்த பெண்.
“பூமியிலிருந்து நிலவு எவ்வளவு தொலைவில் உள்ளது?” என்று அந்த நபர் கேட்டார்.
இந்த பெண்மணி அமைதியாக தன் கைப்பையிலிருந்து 500 ரூபாயை எடுத்து நீட்டினார்.
“இப்போது நீங்கள் கேளுங்கள்” என்றார்.
“எது மலை மேல் செல்லும் போது மூன்று காலில் செல்லும், இறங்கும் போது நான்கு காலில் இறங்கும்?” என்று அந்த பெண் கேட்டார்.
அந்த நபர் விழித்தார்.
“பொறுமையாக யோசித்துச் சொல்லுங்கள். அதுவரை நான் தூங்குகிறேன்” என்று கூறிவிட்டு அந்தப் பெண்மணி உறங்கி விட்டார்.
இந்த நபரும் விமானத்தில் இருப்பவர்களிடமெல்லாம் கேட்டார். யோசித்து யோசித்து மண்டை வெடித்து விடும் போல் இருந்தது அவருக்கு. ஒரு மணி நேரத்திற்கு பின் அந்தப் பெண்ணை எழுப்பி 5000 ரூபாயை நீட்டினார்.
அந்த பெண் வாங்கிக்கொண்டார்.
“அதற்கு பதில் தான் என்ன?” என்று கேட்டார்.
அந்தப் பெண்மணி அமைதியாக ஒரு 500 ரூபாயை நீட்டினார்.