ஒரு ஊரில் ஒரு தத்துவம் பேசிக் கேள்வி கேட்கும் தவளை இருந்தது. அதற்கு எல்லாவற்றையும் கேள்வி கேட்பதே வேலை. அந்தத் தவளை இன்று யார் நம்மிடம் மாட்டுவார்கள் என்று ஒரு தோட்டத்தினூடே தாவிக் குதித்தபடி சென்று கொண்டிருந்தது.
ஒரு ஆயிரங்காலட்டை எந்தப் பரபரப்புமின்றி சிவனே என்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
தவளையின் தத்துவத் தர்க்க மூளைக்குத் தீனி கிடைத்து விட்டது.
"ஆஹா .. ஆயிரங்காலட்டையாரே நலமா..?"
'என்னிடமென்ன இவனுக்கு அக்கறை...?' என்று உள்ளே நினைத்தபடி "நலந்தான்..!" என்றது அட்டை.
"நாலு கால்களை வைத்துக் கொண்டே நான் சில வேளையில் தடுமாறுகிறேன். அதெப்படி நீ இத்தனை கால்களை வைத்துக் கொண்டு சீராக நடக்கிறாய்...?"
தவளையின் கேள்வி உள்ளே புகுந்த மறுகணமே அட்டை திகைத்தது.
"இதென்ன கேள்வி...? இப்படி நான் யோசித்ததே கிடையாது. என் பாட்டில் நடப்பேன். அவ்வளவுதான்..!"
"என்னது உன்பாட்டில் நடப்பாயா...? எப்படி...? எந்தக் காலை முதலில் நகர்த்துவாய்...? எதை இரண்டாவதாக வைப்பாய்...? முப்பத்து மூன்றாவது காலை எப்போது நகர்த்துவாய்...? பதில் சொல்..!"
ஒரே தாவலில் ஒரு பாறையில் போய் அமர்ந்தபடி கேள்வியைக் கேட்டுவிட்டுக் குதர்க்கமாகச் சிரித்தது தவளை.
அட்டை திகைத்தது. "எந்தக்காலை முதலில் வைப்பேன்...? எது அடுத்தது...? எப்படிச் சீராக நடந்தேன்...?' யோசிக்க யோசிக்கப் பைத்தியமே பிடிக்காத குறை அட்டைக்கு.
ஊர்ந்து செல்ல முயற்சித்தது. கால்கள் சிக்கிக் கொண்டன. ஒரு அடியும் நகர முடியாமல் சுருண்டு கிடந்தது அட்டை.
"ஆஹா..! இன்று நம் வேலை முடிந்தது. அடுத்தது யார் மாட்டுவார்களென்று பார்க்கலாம்..!" வக்கிரமான மகிழ்ச்சியோடு தாவி மறைந்தது தத்துவத் தவளை.
நாம் செய்யும் செயல்களைக் கேள்வி கேட்டுக் குழப்புவதற்கென்றே சில தத்துவக்காரர்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.