வனவாசத்தின் தொடக்கத்தில் ஸ்ரீராமனும் சீதையும் லட்சுமணனும் கங்கைக் கரையில் அமைந்த சிருங்கிபேரபுரம் என்ற் ஊரை அடைகிறார்கள். அங்கு குகனுடைய பேரன்பையும் உபசரிப்பையும் ஏற்று ஓரிரவு தங்கியபின் “கங்கையைக் கடந்து செல்ல வேண்டும், படகைக் கொண்டு வருக” என்று ராமர் குகனிடம் கூறுகிறார். குகன் தனது படகோட்டி ஒருவரை அழைக்க, அவன் வருகிறான்.
கரையோரமாக நங்கூரமிட்டு நிறுத்தியுள்ள படகில் ராமர் ஏறுவதற்கு முயன்ற போது, “ஐயா கொஞ்சம் பொறுங்கள்” என்று படகோட்டி கைகூப்பிக் கொண்டு முன்னால் வந்து தடுக்கிறான்.
அனைவரும் இதென்னடா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். லட்சுமணனுக்குக் கடுங்கோபம், யார் என் அண்ணனைத் தடுப்பது என்று கடுகடுத்த முகத்துடன் முன்னே வருகிறான்.
ராமர் அவனைக் கையமர்த்துகிறார். படகோட்டியை அருகில் அழைத்து என்னப்பா விஷயம் என்று விசாரிக்கிறார்.
“ஐயா, உங்களுடைய பெருமையைப் பற்றி ரொம்பவேக் கேள்விப்பட்டிருக்கேன். ஒருமுறை நீங்கள் நடந்து போகும்போது வழியில் கிடந்த கல் உங்க பாதம் பட்டு ஒரு அழகிய பெண்ணாக மாறிவிட்டதாம். அவ்வளவு கடினமான கல்லுக்கே அப்படி நேர்ந்தது என்றால், மரத்தால் செய்த என் படகு எப்படி ஆகும் என்று தெரியவில்லையே. அதுவும் ஒரு அழகியாகி விட்டால், என் பிழைப்பு என்ன ஆவது? அதனால் உங்களது பாதங்களை நான் என் கையால் நன்றாகக் கழுவிய பிறகு தான் படகில் ஏற அனுமதியளிக்க முடியும்” என்று பணிவுடன் கூறுகிறான் படகோட்டி.
அவனது கள்ளங்கபடமற்ற வெள்ளந்தியான அன்பைக் கண்டு ஸ்ரீராமரது முகத்தில் அன்புடனான ஒளி ஏற்பட்டது. சீதையையும் பின்பு லட்சுமணனையும் பார்த்துப் புன்னகைக்கிறார்.
பின்னர், “நீ சொல்வது சரிதான்” என்று முன்னே வந்து தனது திருவடிகளை நீட்டினார்.
படகோட்டி தனது தோல்பையிலிருந்து தண்ணீரை எடுத்து ராமரின் பாதங்களின் மீது வார்க்கிறான். அருகில் நிற்கும் அவனது குடும்பத்தாரும் வருகிறார்கள். அளவற்ற அன்புடனும் மகிழ்ச்சியுடனும் ஸ்ரீராமரின் பாதங்களைத் தொட்டு அலம்பி அந்தத் தீர்த்தத்தைத் தங்கள் தலைமீது தெளித்துக் கொள்கிறார்கள்.
துளசிதாசர் இயற்றிய ஸ்ரீராமசரிதமானஸ் என்ற ஹிந்தி மொழி ராமாயணத்தில் இந்த நிகழ்வு வருகிறது.
ஸ்ரீராமரின் பாத ஸ்பரிசம் என்ற புண்ணியத்தால் கங்கையாற்றைக் கடக்கப் படகோட்டி வந்த அந்தப் படகோட்டி மட்டுமல்ல, அவனது குடும்பமும், முன்னோர்களும் பின்னோர்களும் எல்லா தலைமுறைகளும் பிறவிப் பெருங்கடலைக் கடந்து பகவானுடைய பரமபதத்தை அடைந்தார்கள் என்று கவிஞர் அதில் குறிப்பிடுகிறார்.