ஒரு மனிதன் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்த போது, தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு வேரைப் பற்றிக் கொண்டான்.
அந்தப்பிடி தளர்ந்தால் பாதாளம் போகும் அபாயம். அவனுக்கு என்ன செய்வதென்றேத் தெரியவில்லை.
அவன் இது வரை கடவுளை நம்பியதில்லை.
உடனே அவன் கடவுளை நினைத்து, “கடவுளே, உன்னை நான் முழுமையாக நம்புகிறேன். நீதான் காப்பாற்ற வேண்டும்”என வேண்டினான்.
அப்போது வானிலிருந்து ஒரு குரல், “மனிதனே, நீ என்னை நம்ப மாட்டாய்” என்றது.
உடனே மனிதன், “கடவுளே, என்னைக் கை விட்டு விடாதே... நான் உன்னை நிச்சயம் நம்புகிறேன்” என்றான்.
உடனே அந்தக் குரல், “எனக்கு நம்பிக்கை இல்லை” என்றது.
“கடவுளே, நீ தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று அந்த மனிதன் அழுகையோடு தெரிவித்தான்.
உடனே அந்தக் குரல், “அப்படியானால் சரி, நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்.முதலில் நீ பிடித்திருக்கும் அந்த வேரை விட்டுவிடு...” என்றது.
அதற்கு மனிதன், “வேரை விட்டு விட்டால், நான் கீழே விழுந்து இறந்து விடுவேனே?” என்றான்.
அதன் பின்பு, வானத்திலிருந்து எந்தக் குரலும் கேட்கவில்லை.