இராவணன் ஒருமுறை கைலாயத்திற்குச் சென்ற போது, தன்னுடைய வலிமையைக் காண்பித்து அங்கிருப்பவர்களைத் துன்புறுத்தினான்.
அதனைக் கண்டு கோபமடைந்த சிவபெருமான், தனது கால் கட்டைவிரலால் சிறிது கீழ்நோக்கி அழுத்தினார்.
அந்த அழுத்தத்தில், அங்கிருந்த மலை சிறிது அசைந்தது. அப்போது, இராவணன் அந்த மலையின் கீழாக விழுந்து விட்டான்.
மலையின் கீழ் நசுங்கிக் கிடந்த அவன், தன் உடம்பிலிருந்து எடுத்த நரம்பின் மூலம் வீணை செய்து இசைத்துச் சிவபெருமானைப் போற்றிப் பல பாடல்களைப் பாடினான்.
அவனின் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த சிவபெருமான், அவனை அதிலிருந்து விடுவித்தார்.
விடுவிக்கப்பட்ட இராவணன் சிவபெருமானை வணங்கி நின்றான்.
சிவபெருமான் அவனிடம், “இராவணனே, உன் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தேன். நீ வேண்டிய வரத்தைக் கேள்” என்றார்.
இராவணன் ஏற்கனவே வாலியிடம் நேருக்கு நேராக நடைபெற்ற சண்டையிலும், கார்த்த வீரியார்ஜுனன் என்பவனிடம் நடந்த சண்டையிலும் தோற்று போயிருந்தான்.
இது போல் மேலும் சிலரிடமும் அவன் தோற்றுப் போயிருந்ததால், அவனுக்கு வலிமை மிக்க ஆயுதம் ஒன்று தேவையாக இருந்தது.
எனவே அவன் சிவபெருமானிடம், “தனக்கு இந்திரனின் வச்சிராயுதத்தை விட கூடுதல் வலிமையுடைய ஆயுதம் ஒன்றைத் தந்தருள வேண்டும்” என்று வேண்டினான்.
சிவபெருமானும் அவன் கேட்டபடி மிகவும் வலிமை வாய்ந்த ஆயுதத்தை அவனுக்கு வழங்கினார்.
சிவபெருமான் வழங்கிய வலிமை வாய்ந்த ஆயுதத்தின் பெயர்தான் சந்திரகாசம்.
அந்த சந்திரகாசம் எனும் ஆயுதத்தைக் கொண்டுதான் இராவணன் தன்னை எதிர்த்த சடாயுவை வெட்டி வீழ்த்தினான்.
இந்திரனின் வச்சிராயுதம் மலைகளைக் கூடப் பிளக்கும் வல்லமை கொண்டது.
அதனை விட வலிமை வாய்ந்த சந்திரகாசம் எனும் ஆயுதத்தால் சடாயு வெட்டப்பட்டு வீழ்ந்ததால், சடாயு மலை வீழ்ந்த மாதிரி வீழ்ந்தான் என்று சொல்கின்றனர்.