தேவேந்திரனுக்கும், தேவகுருவான பிரஹஸ்பதிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரஹஸ்பதி மறைந்துவிட, தேவேந்திரன் குரு இல்லாமல் துன்பப்பட்டான்.
இந்நிலையில் துவஷ்டாவின் மகன் விஸ்வரூபன் என்பவனைத் தன் குருவாய்க் கொண்டான்.
விஸ்வரூபன் அசுரர்களிடம் நெருக்கம் கொண்டவன். அவன் தேவர்களுக்கான அவிர் பாகத்தில் ஒரு பகுதியை அசுரர்களுக்கும் கொடுத்து வந்தான்.
இதைத் தெரிந்து கொண்ட தேவேந்திரன் விஸ்வரூபனைக் கொன்று விடுகிறான்.
கோபம் கொண்ட துவஷ்டா தன் ஜடாமுடியிலிருந்து விருத்திராசுரனை உருவாக்கி இந்திரனைக் கொல்ல அனுப்பினான்.
தேவேந்திரன் விருத்திராசுரனிடம் நட்புப் பாராட்டி நயவஞ்சகமாய் அவனையும் கொன்று விடுகிறான்.
அதனால் தேவேந்திரனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது.
அதனால் அவன் பலத்தில் பாதி, யமன், வாயு, அஸ்வினி தேவர்களைச் சென்றடைந்தது.
இந்நிலையில், மஹாவிஷ்ணு பூமியின் பாரம் குறைப்பதற்காகக் கிருஷ்ணனாய்த் தோன்றினார். அவருக்குத் துணையாகத் தேவேந்திரன் பாண்டவர்களாய்ப் பிறந்தான்.
தேவேந்திரனின் பெருமை யுதிஷ்டிரனாகவும், பலம் பீமனாகவும், பாதி அம்சம் அர்ஜுனனாகவும், அஸ்வினி தேவர்களின் அழகு நகுல, சகாதேவர்களாகவும் பிறப்பு எடுத்தது.
ஆகவே, திரௌபதி ஐவரைத் திருமணம் செய்து கொண்டதாய்ச் சொல்லப்பட்டாலும், அவள் ஒருவரைத்தான் திருமணம் செய்து கொண்டாள் என்கிறது மார்க்கண்டேய புராணத்துக் கதை.