ஒருவன் ஒரு துறவியிடம் சென்று வணங்கி எழுந்து சொன்னான்:
“சுவாமி, நான் ஒரு ஏழை. கடவுள் என்னிடம் கருணையேக் காட்டவில்லை. மற்றவர்களுக்கெல்லாம் செல்வத்தை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கிறார். என்னிடம்தான் எதுவும் தரவில்லை. எனக்குச் செல்வம் கிடைக்கும்படியாகத் தாங்கள்தான் அருள்புரியவேண்டும்”
துறவி, “ஓ, அப்படியா? உன்னிடம் உள்ளவற்றை விற்றுப் பணமாக்கினால் நிறைய பணம் கிடைக்குமே” என்றார்.
செல்வம் வேண்டும் என்று கேட்டவன், “என்னிடம் என்ன இருக்கிறது விற்றுக் காசாக்குவதற்கு? என்னிடம்தான் எதுவும் இல்லையே” என்றான்.
துறவி, “நீ ஒன்று செய். உன்னுடைய ஒரு கண்ணை விற்றுவிடு. அதற்கு உனக்கு பத்தாயிரம் ரூபாய் கிடைக்கச் செய்கிறேன்” என்றார்.
அவன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அடுத்தபடியாக அவனுடைய கை, கால், மூக்கு, நாக்கு என்று ஒவ்வொரு உறுப்பாகக் கேட்டுக்கொண்டே வந்தார். எந்த ஒன்றையுமே பணத்துக்காக இழப்பதற்கு அவன் தயாராக இல்லை.
அப்போது துறவி கூறினார்:
“நானே உன்னிடம் ஒவ்வொன்றும் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பத்துப் பொருட்களைக் கேட்டேன். ஆக, ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் உன்னிடம் இருக்கிறது. அப்படி இருக்க நீ எப்படி உன்னை ஏழை என்று சொல்லலாம்? அளவில்லாத செல்வச் சுரங்கமாகக் கடவுள் இந்த உடலை உனக்குக் கொடுத்திருக்கிறார். அதைப் பணியில் ஈடுபடுத்து. உழைத்துச் சம்பாதித்து திருப்தியோடு இரு. உடல் என்கிற இந்த நவரத்தின களஞ்சியத்தைச் சரியானபடி பயன்படுத்துபவன் ஒருபோதும் ஏழை ஆவதில்லை”