அவர் ஒரு சமூக சேவகர். ஒரு நாள் பணி முடித்து நள்ளிரவு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார்.
ஒரு சுரங்கபாதையை கடக்கும்போதும், திடீரென அவரை வழி மறித்த திருடன் ஒருவன், கூரிய கத்தியைக் காட்டி, “உன் பர்ஸை என்னிடம் கொடு. முரண்டு பிடித்தால் உன் குரல்வளையை அறுத்துவிட்டு அதை நான் பறிக்க நேரிடும்” என்று மிரட்டினான்.
அந்தத் திருடனுக்கு அதிகபட்சம் 18 அல்லது 19 வயது இருக்கும்.
அவனிடம் பதில் ஏதும் பேசாமல் அவனிடம் தனது பர்ஸை ஒப்படைத்தார் அவர்.
அவன் தப்பியோட முயற்சிக்கும் நேரத்தில் அவனை கூப்பிட்டார்.
“தம்பி… ஒரு நிமிஷம்… நீ இரவு முழுக்க இதே மாதிரி கத்தியைக் காட்டி எல்லோரிடமும் பணம் பறிப்பதாக இருந்தால், இந்த கோட் உனக்குத் தேவைப்படும். இதைப் போட்டுக்கொள். வெளியில் ரொம்பக் குளிரா இருக்கு!” என்று சொன்னபடி தனது கோட்டைக் கழட்டினார்.
திருடனுக்கு குழப்பம். அவரை வித்தியாசமாகப் பார்த்தான்.
“நீங்கள் ஏன் இவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்?” என்றான் அந்தத் திருடன்.
உடனே அவர், “தம்பி, நீ பசியுடன் இருக்கிறாய் என்று நினைக்கிறேன். உனக்கு விருப்பமிருந்தால் நாம் இருவரும் பக்கத்திலிருக்கும் ஏதாவது கடைக்குச் சென்று சாப்பிடலாம்” என்றார்.
அவன் இன்னும் அவரை நம்பாமால் பார்த்தான்.
“தம்பி, இந்த வயதில் ஒரு சில நூறு ரூபாய்களுக்காக நீ இப்படிக் கடினமாக உன் சுதந்திரத்தை அடகு வைக்கிறாய் என்றால் நீ ஏதோ கஷ்டத்தில் இருக்கிறாய் என்று நினைத்தேன். உனக்கு விருப்பம் இருந்தால் சாப்பிடலாம் வா…” என்றழைத்தார் அவர்.
திருடனுக்கு மேலும் குழப்பம். அவர் வேறு ஏதாவது கத்தியோ ஆயுதமோ மறைத்து வைத்திருக்கிறாரா என்று அவரைச் சோதனையிட்டான். அப்படி எதுவும் இல்லை.
அதன் பிறகு அவனுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. சாப்பிடச் சம்மதித்தான்.
இருவரும் அருகிலிருந்த ஒரு சிறிய ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டனர்.
ஓட்டல் மேலாளர் முதல் வெயிட்டர் வரை அனைவரும் வந்து அவருக்கு வணக்கம் தெரிவித்தனர்.
“என்ன இது உங்களுக்கு இப்படி மரியாதை தருகிறார்கள்? நீங்கள் இந்த ஓட்டலுக்கு உரிமையாளரோ?” என்றான் அவன்.
“இல்லை.. இல்லை… நான் அடிக்கடி இங்கு வந்து சாப்பிடுவது வழக்கம்… எனவே எனக்கு இங்கிருப்பவர்கள் அனைவரும் நல்ல அறிமுகம்” என்றா அவர்.
“வெயிட்டரிடம் கூட பண்போடு நடந்து கொள்கிறீர்களே…?”
“நாம் எல்லோரிடமும் பண்பாக நடந்து கொள்ளவேண்டும் என்று உனக்குப் பள்ளியில் சொல்லித் தரவில்லையா?”
“தந்தார்கள். ஆனால்… அதெல்லாம் வாழ்க்கைக்கு உதவாது என்று நினைத்தேன்!”
சாப்பிட்டு முடிக்கும்போது அவனிடம், “என்னிடம் கொடுக்கப் பணம் இல்லை. பர்ஸ்தான் உன்னிடம் இருக்கிறதே. பர்சை திருப்பித் தந்தால் சாப்பிட்டதற்குப் பணத்தைச் செலுத்திவிடுகிறேன். உன்னையும் கண்ணியமாக நடத்துவேன்” என்றார்.
நியாயமாக அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு திருடன் பர்ஸுடன் ஓட்டம் பிடித்திருக்கவேண்டும். ஆனால் அவன் ஓடவில்லை. மாறாக அந்த பர்ஸை அவரிடமேத் திருப்பித் தந்தான்.
அடுத்து அவர் என்ன செய்தார் தெரியுமா? “உனக்கு சரி என்றால் இந்தக் கத்தியை நான் வாங்க விரும்புறேன்” என்று கூறி இருவர் சாப்பிட்டதற்கும் பணத்தை தந்ததோடல்லாமல் அந்தக் கத்தியைத் திருடனிடம் ஒரு நல்ல தொகை கொடுத்து வாங்கிவிட்டார்.
ஒரு திருடனை மாற்றியது போலவும் ஆச்சு. தன்னையும் காத்துக்கொண்டு தன் பொருளையும் காப்பாற்றிக்கொண்டது போலவும் ஆச்சு.
வீட்டுக்கு வந்து தன் அம்மாவிடம் நடந்த அனைத்தையும் கூறுகிறார். “மகனே… நேரம் கேட்டா நீ வாட்ச்சையே கழட்டிக் கொடுக்குற ஆள்… நீ இப்படி நடந்துகிட்டதால், அவனும் பதிலுக்கு அப்படி நடந்துகிட்டான். இதில் எந்த ஆச்சரியமும் இல்லை” என்றார்.
நாம் எப்படி மற்றவர்களை நடத்துகிறோமோ அப்படியேதான் அவர்களும் நம்மை நடத்துவார்கள்.
ஏனென்றால் இந்த உலகம் ஒரு கண்ணாடி.