ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படிப் பயன்படுத்துகிறான் என்று அறிய ஒரு மன்னனுக்கு ஆவல் ஏற்பட்டது.
அதைச் சோதித்துப் பார்க்க நினைத்து ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக்கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான்.
பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம், “கவனமாகக் கேள், தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்தக் கனமான ரொட்டியைக் கொடு. மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு சாதாரணப் பிச்சைக்காரனுக்குக் கொடு” என்று சொல்லிக் கொடுத்தனுப்பினான்.
அந்தப் பணியாளன், நீண்ட மேலங்கி அணிந்து அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போல் தோற்றமளித்த ஒரு நபருக்கு வைரக் கற்கள் நிரம்பிய கனமான ரொட்டியைக் கொடுத்தான். மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்குக் கொடுத்தான்.
இவற்றையெல்லாம் மன்னன் தன் அரண்மனை மேல் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். சாமியார் போன்ற தோற்றமளித்த நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப் பார்த்தான்.
இது சரியாகப் பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று எண்ணி தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனை அழைத்து, “நண்பா, எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக் கொண்டு உன்னுடையதை எனக்குக் கொடு” என்றான்.
உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக் கொண்டனர்.
இதைக் கண்ட மன்னன், “ஆஹா! என்ன கடவுளின் உள்ளம்? ஒரு தவயோகிக்கு செல்வம் தேவை இல்லையாதலால் வைரக்கற்கள் உடைய ரொட்டி அவரிடம் தங்காமல் அந்த ஏழையிடம் சென்று விட்டது” என்று நினைத்தான்.