காகம் ஒன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்தது.
அது ஒரு சமயம் கொக்கு ஒன்றைப் பார்த்தது.
கொக்கைப் பார்த்த காகத்துக்கு, கொக்கின் வெள்ளை நிறம் அழகாகத் தோன்றியது.
காகம் கொக்கிடம், “கொக்கே, நீ வெள்ளை நிறத்தில் பார்க்க மிகவும் அழகாக இருக்கிறாய். கருப்பாக இருக்கும் எனக்கே என்னைப் பிடிக்கவில்லை” என்றது.
அதைக் கேட்ட கொக்கு சொன்னது.
“நானும் உன்னைப் போல்தான் இருந்தேன். ஆனால், ஒரு கிளியைப் பார்த்தது. அது இரண்டு நிறங்களில் எவ்வள்வு அழகாக இருக்கிறது தெரியுமா?” என்றது.
அதைக் கேட்டதும் காகம் கிளியைத் தேடிச் சென்று பார்த்தது, கிளியின் அழகைப் புகழ்ந்தது.
காகம் கிளியிடம், “காகமே, நான் அழகாக இருக்கிறேன் என்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், ஒரு முறை நான் மயிலைப் பார்த்தேன். அதன் தோகையும், அழகிய நிறமும் என்னை கவர்ந்து விட்டது. என்னை விட மயில்தான் மிகவும் அழகானது”என்றது.
உடனே காகம் மயில் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றது. அதனால் காட்டிற்குள் இருக்கும் ஒரு மயிலைக் கூட காண முடியவில்லை.
அப்போது, அதற்கு ஒரு மிருகக்காட்சி சாலையில் மயில் இருக்கும் தகவல் கிடைத்தது.
உடனே அது மயிலைப் பார்க்க மிருகக்காட்சி சாலைக்குச் சென்றது.
அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மயிலை பார்க்கக் காத்திருந்தனர்.
அதனைக் கண்ட காகம், உண்மைதான் மயிலின் அழகு வேறு எந்தப் பறவைக்கும் இல்லை என்று நினைத்தது.
அழகிய மயிலைக் காண மக்கள் வரிசையில் காத்துக் கிடப்பதையும் கண்டு பொறாமைப்பட்டது.
மயிலைச் சென்று பார்த்த காகம், “அழகு மயிலே, உன்னைக் காண இவ்வளவு பேர்... வரிசையில் நிற்பதைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது. இந்த மனிதர்கள் என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை உலகிலேயே நீதான் மிக அழகானவர், மகிழ்ச்சியானவர்” என்றது.
அதைக் கேட்ட மயில் சொன்னது:
“அன்புக் காகமே, முன்பு நானும் என் அழகை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தேன். மகிழ்ச்சியோடு இருந்தான். ஆனால், எனது இந்த அழகுதான் என்னைத் தற்போது இந்தச் சிறையில் பூட்டி வைத்திருக்கிறது. இந்த மிருகக்காட்சிச் சாலை முழுவதும் பார்த்துவிட்டேன். இங்கு அழகு என்று நீ சொல்லக்கூடிய பறவைகள் அனைத்தும் சிறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. இங்கு காகம் மட்டும்தான் பூட்டி வைக்கப்படவில்லை. நான் ஏற்கனவே யோசித்திருந்தேன். நாமும் காகம் போலிருந்தால், இந்த உலகத்தில் மகிழ்ச்சியாக பறந்து திரியலாம். இங்கு சிறைப்பட்டுத் துன்பப்பட வேண்டியதில்லை”
அழகு ஆபத்தானது என்பதை உணர்ந்த காகம் அன்றிலிருந்து தனது கருப்பு நிறத்தை வெறுப்பதேயில்லை.