இரண்டு குறுநில மன்னர்களுக்கிடையே ஒரு முறை போர் மூளும் சூழல் ஏற்பட்டது.
அவர்கள் எதை செய்வதானாலும் அவர்கள் இருவருக்கும் பொதுவான ஒரு குருவிடம் சென்று ஆலோசனை கேட்டு, அதன் பிறகே செய்வார்கள்.
அந்தக் குரு சாதாரணமானவர் அல்ல. மாபெரும் ஞானி பல ஆண்டுகள் தவம் செய்து பல சித்திகள் கை வரப்பெற்றவர். தனது சக்திகளைக் கொண்டு நல்ல காரியங்கள் பல செய்து வந்தார். மக்களுக்கு அவர்களுக்கு வரவிருக்கும் ஆபத்தைப் பற்றிச் சொல்லி அவர்களின் பிரச்சனைகளையும் தீர்த்து வந்தார்.
இரண்டு குறுநில மன்னர்களில் முதலமானவன் படைபலம் சற்று அதிகம் கொண்டவன். திறமைசாலி.
ஒரு நாள் குருவைச் சந்திக்க வந்தான். “குருவே, நான் என் எதிரி நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டிய வேளை வந்து விட்டது. போரில் எனக்கு வெற்றி கிடைக்குமா? இல்லையா என்று உங்கள் யோக சக்தியை வைத்துக் கடவுளிடம் கேட்டுச் சொல்லுங்களேன்…” என்றான்.
குருவும் கண்களைச் சிறிது நேரம் மூடிக் கொண்டு தியானம் செய்த பின்னர், “இந்தப் போரில் நீ தான் வெற்றி பெறுவாய்!!” என்றார்.
சந்தோஷமாக விடை பெற்றுச் சென்றான் மன்னன்.
அடுத்த நாள் இரண்டாம் மன்னன் வந்தான். அவனிடம் படைபலம் சற்றுக் குறைவு தான். ஆனாலும் தைரியசாலி. அவனும் இதேக் கேள்வியைக் குருவிடம் கேட்டான்.
அவரும் சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டு, “இந்த போரில் நீ தோல்வியடையும் வாய்ப்பே அதிகம்” என்றார்.
அடிப்படையில் இந்த மன்னன் அசாத்திய தைரியசாலி , தன்னம்பிக்கை மிக்கவன். எனவே குரு சொன்னதைக் கேட்டுக் கலங்கவில்லை.
நேராகத் தனது நாட்டுக்குச் சென்று, பாதுகாப்பு அமைச்சர், தளபதி, முன்னணி வீரர்கள் அடங்கிய கூட்டம் ஒன்றைக் கூட்டினான்.
“வீரர்களே, இந்தப் போரில் நாம் வெற்றியடைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எனவே நமது எதிரியைத் தோற்கடிக்க, நாம் எல்லா விதங்களிலும் முயற்சிக்க வேண்டும். இன்றிலிருந்து நமது வீரர்கள் போருக்கான ஒத்திகையைத் துவக்கட்டும். அது போக வீட்டுக்கு ஒருவரைத் தயார் செய்யுங்கள். குதிரைகளைத் தயார்படுத்துங்கள். ஆயுதங்களை கூர் தீட்டுங்கள். ஜெயிப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றைக் கூட விடக்கூடாது!” என்றான்.
முதலாவது மன்னனோ, வெற்றிச் செய்தி முதலிலேயே கிடைத்து விட்ட மகிழ்ச்சியில், கேளிக்கைகளிலும் கொண்டாட்டங்களிலும் காலத்தைக் கழித்தான்.
அவன் வீரர்களோ ஒரு படி மேலேச் சென்று, நாம் தான் ஜெயிப்போம் என்று விதி நம் பக்கம் இருக்கும் போது நாம் எதற்கு வீணாக ஒத்திகைகளில் காலத்தை கழிக்க வேண்டும் என்று அஜாக்கிரதையாக இருந்தனர்.
போருக்கான நாளும் வந்தது. இரு நாட்டு வீரர்களும் எதிரெதிரே அணிவகுத்து நின்றனர்.
இரண்டாம் நாட்டு மன்னனும் அவன் வீரர்களும் பல நாட்கள் ஒத்திகை பார்த்து போருக்கு தயார் நிலையில் இருந்தனர்.
முதலாம் நாட்டு மன்னனும் வீரர்களும் முன்தினம் இரவு முழுதும் கேளிக்கைகளில் ஈடுபட்டிருந்தமையால் முழுக்க முழுக்கப் போதையில் இருந்தனர்.
போர் துவங்கிய சிறிது நேரத்திலேயே இரண்டாம் நாட்டு வீரர்கள் மிகச் சுலபமாக முதல் நாட்டைத் தோற்கடித்து கோட்டையைக் கைப்பற்றி விட்டனர்.
முதல் நாட்டு மன்னன் சிறை வைக்கப்பட்டான்.
தண்டனை விதிக்கப்படும் முன், தன் கடைசி ஆசையாகத் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய தன் குருவைப் பார்க்க வேண்டும் என்றான்.
அதன்படி குருவின் முன்னர் கொண்டு போய் நிறுத்தப்பட்டான்.
“உங்கள் வாக்கு பொய்த்து விட்டதே. நான் தோற்று விட்டேனே… இது நியாயமா?” என்றான்.
குரு சிரித்துக் கொண்டே, “உழைப்பவர்களுக்கே இந்த உலகம் சொந்தம். உன்னிடம் திறமை இருந்தும் நீ தான் வெற்றி பெறப் போகிறாய் என்று நீ தெரிந்து கொண்டதால், உனது வெற்றிக்கு உழைக்கவில்லை. அஜாக்கிரதையாக இருந்தாய். ஆனால், உன் எதிரி நாட்டு மன்னனோ, அவன் தான் போரில் தோற்பான் என்று தெரிந்து கொண்ட போதும், நம்பிக்கையை இழக்காமல், இரவு பகல் பயிற்சி செய்து படையைத் தயார்ப் படுத்தினான். அந்த ஏழு நாட்களும் அவன் தூங்கவில்லை. ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் கொள், திறமை உழைக்கத் தவறினால், உழைப்பு திறமையை வென்று விடும். இதை மாற்ற யாராலும் முடியாது!” என்றார்.
அர்ப்பணிப்பு உணர்வு கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டால் விதியையும் வெல்ல முடியும் என்று உணர்ந்து கொண்ட மன்னன் மன்னிப்பு கேட்டுக் கொண்டு விடை பெற்றான்.