ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்துச் சொன்னார், “மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்குத் தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்குச் சென்று கைக்கடிகாரக் கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார்?” என்றார்.
அவன் போய் கேட்டு விட்டுத் தந்தையிடம், “இது பழையது என்பதால் 5 டாலர்கள் மட்டுமே தர முடியும் என்கின்றனர்” என்றான்.
தந்தை “அரியதான பழைய பொருட்கள் விற்கும் சிறப்புக் கடைக்குப் போய்க் கேட்டுப் பார்” என்றார்.
அந்தக் கடைக்குப் போய் கேட்டு விட்டு வந்த அவன் தந்தையிடம், “இதற்கு 5000 டாலர்கள் தர முடியும் என்கின்றனர்” என்றான்.
தந்தை அதனை அங்கிருந்த பழம்பொருட்களைக் காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்திற்குக் கொண்டு சென்று விலையை கேட்டுப்பார் என்றார்.
அவன் போய் கேட்டு விட்டுத் தந்தையிடம், “நான் அங்கு போன போது, அவர்கள் அதனைப் பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்கள் என்கின்றனர்” என்றான்.
தந்தை மகனை பார்த்து, “மகனே! சரியான இடம் தான், உனது நிலையைச் சரியாக மதிப்பிடும். எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை” என்றார்.
“உன்னுடைய மரியாதையை அறிந்தவனே, உன்னைப் பெருமைப்படுத்துவான். உனக்குத் தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே… இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்… நமக்கு மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட இருக்கக்கூடாது” என்றார்.
மகனும் தந்தையின் வழிகாட்டுதலைப் பின்பற்றி வாழ்வில் வெற்றியடைந்தான்.