ஒரு ஊரில் ஒரு முனிவர் இருந்தார். அவரைப் பார்க்க நான்கு பேர் வந்திருந்தனர்.
அவர்கள் முனிவரிடம், “சாமி உலகத்தப் புரிஞ்சிக்கவே முடியலயே, அதுக்கு என்ன வழி? என்று கேட்டனர்.
அததற்கு அந்த முனிவர், “தெரியவில்லை” என்று ஒரு வரியில் பதில் சொன்னார்.
ஆனாலும் வந்தவர்கள், “என்ன சாமி, நீங்க எவ்ளோ பெரிய முனிவர், இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!” என்றனர்.
அதற்கு முனிவர் அவர்களிடம், “சரி, இப்ப நான் உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைத்துக் கொண்டு செல்கிறேன். போகிற வழியில், உங்களுக்கு ஒரு காட்சியைக் காண்பிக்கிறேன். அது குறித்து, நீங்க கருத்து சொல்ல வேண்டும். நீங்கள் சொல்லும் கருத்து தப்பா இருந்தால், இந்த விமானம் உங்களைக் கீழேத் தள்ளிவிட்டுடும்” என்றார்.
அதற்கு ஒத்துக்கொண்ட் நான்கு பேரும் முனிவரோடு சேந்து புஷ்பக விமானத்தில் பயணம் செய்தனர்.
சிறிது தூரம் சென்ற போது, ஒரு இடத்தில் ஒரு புலி, குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பிறகு, தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு இரை தேடி அந்தப் பக்கமாச் சென்றது. அப்போது, ஒரு மான், அதுவும் குட்டி போட்டு, பசிக்குத் தண்ணீர் குடிக்க வந்தது. மானைப் பார்த்த அந்தப் புலி, அதன் மேல் பாய்ந்து, அதைக் கொன்றது. அதைத் தானும் சாப்பிட்டு, தன்னோட குட்டிகளுக்கும் கொண்டு வந்து கொடுத்தது. அதைச் சாப்பிட்ட புலிக்குட்டிகளும் மகிழ்ச்சியடைந்தன.
அந்தப் பக்கம், தன் அம்மாவப் பறிகொடுத்த மான் குட்டிகள் பசியோடு அவதிப்பட்டன. அந்தக் காட்சியை அவர்களிடம் காட்டிய முனிவர், “இதைப் பற்றிய உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்” என்றார்.
அந்த நான்கு பேரில் ஒருவர், “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சு” என்றார்.
உடனே அந்த விமானம் அவரைக் கீழேத் தள்ளிவிட்டது.
அடுத்தவரைப் பார்த்து முனிவர், “உன் கருத்தைச் சொல்” என்றார்.
ஏற்கனவே, தன்னுடனிருந்த ஒருவன் கீழே விழுந்ததைப் பார்த்த அவன், “இல்லை. இது சரிதான், ஏனெனில் புலிகளுக்கு இரையாகத்தானே மான்கள் இருக்கிறது” என்றான்.
அந்தப் பதிலைக் கேட்டவுடனே அவரையும் விமானம் கீழேத் தள்ளி விட்டது.
அதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அடுத்தவன், மிகவும் எச்சரிக்கையுடன், “ இது தவறும் இல்லை, சரியும் இல்லை” என்று சொன்னான்.
அவனையும் அந்த விமானம் கீழேத் தள்ளிவிட்டது.
கடைசியாக விமானத்தில இருந்தவனைப் பார்த்து முனிவர், “உன் கருத்து என்ன? என்று கேட்டார்.
அவன், “தெரியவில்லை சாமி” என்றான்.
அந்த விமானம் அவனைக் கீழேத் தள்ளவில்லை. இரண்டு பேரையும் சுமந்தபடி பயணக்கித் தொடங்கியது.
நம் வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும், நாம் புரிந்து கொண்டால் போதும். தேவையில்லாதவைகளைத் தெரிந்து கொள்ள முயற்சிப்பது தேவையற்றது. அது போலத் தனக்குத் தெரியாதவைகளைத் தெரிந்தது போல் பேசுவதும் தேவையற்றது. தெரியாதவைகளைத் ‘தெரியாது’ என்று ஒத்துக் கொள்வதுதான் மிகச் சரியானது.