அது ஓர் அழகிய வனம். அதில் நரி ஒன்று புதரில் வாழ்ந்து வந்தது. நரியின் இருப்பிடமானது கொடிய புலியின் வசிப்பிடத்திற்கு அருகில் இருந்தது.
ஆனால் தந்திரக்கார நரி புலியின் பார்வையில் படாமல் வசித்தது. அதாவது புலியின் அருகில் செல்லாமலும் அதே நேரத்தில் புலியை விட்டு தூரத்தில் செல்லாமலும் மிகக் கவனமாக வாழ்ந்து வந்தது..
நரியின் வாழ்க்கை முறையைக் கண்ட கரடி நரியிடம் “நீ ஏன் கொடிய புலிக்கு அருகில் வாழ்கிறாய்?” என்று கேட்டது..
அதற்கு நரி “எனக்கு புலியைப் போல உடல் வலிமை இல்லை. என்னால் பெரிய விலங்கினை எதிர் கொள்ள முடியாது..
வலிமையான புலிக்கு அருகில் எந்த விலங்கும் வருவதில்லை. எனவே எனக்கு எந்த விலங்கினாலும் ஆபத்து இல்லை. இதுவே எனக்கு கிடைக்கும் பாதுகாப்பு..
மேலும் புலி தின்று விட்டுப் போடும் எஞ்சிய இறைச்சியை நான் எனக்கான இரையாகக் உட்கொள்கிறேன். இதனால் நான் காட்டில் அலைந்து திரிந்து உணவு தேடும் சிரமமும் இருப்பது இல்லை.” என்று கூறியது..
கரடி நரியிடம் “நீ ஏன் புலியின் எதிரில் போவதில்லை?” என்று கேட்டது..
அதற்கு நரி “புலி என்னைப் பார்த்தால் அடித்துக் கொன்று விடும். அதனால்தான் நான் அதன் எதிரில் போவதில்லை.” என்று கூறியது..
இக்கதை மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன தெரியுமா?.
நெருப்புக்கு அருகே குளிர் காய நினைப்பவர்கள் நெருப்பை விட்டு தூரமாகச் சென்றால் போதுமான வெப்பம் கிடைக்காமல் குளிர் வாட்டும்..
நெருப்பு அருகில் நெருங்கி விட்டால் வெப்பம் நம் உடலைச் சுட்டு விடும். எனவே குளிர் காய நினைப்பவர்கள் நெருப்புடன் ஒட்டினாற் போல ஒட்டாமல் இருக்க வேண்டும்..
அதே போல் நாம் அதிகாரம் மிக்கவர்களின் அருகில் இருக்கும் போது நமக்கு சில நேரங்களில் நன்மை கிடைக்கிறது..
வேறு சில நேரங்களில் அதுவே நமக்கு ஆபத்தாகிறது. எனவே அதிகாரத்தில் அருகில் இருப்பவர்களை ஒட்டினாற்போல் ஒட்டாமல் இருக்க வேண்டும்.