திருத்தமாகப் பேச முடியாத ஒரு இளைஞன், மந்திர தீட்சை பெறுவதற்காக வித்வான் ஒருவரை அணுகினான்.
அவர் எளிய மந்திரமான ஸ்ரீகிருஷ்ணாய நம: என சொல்லச் சொன்னார்.
அவன் இருகைகளையும் குவித்தபடி, ஸ்ரீ திருஷ்ணாய நம: என்று உச்சரித்தான்.
மீண்டும் மீண்டும் சொன்னபோதும் சரியான உச்சரிப்பு வரவில்லை.
உனக்குச் சொல்லித் தர நான் ஆள் இல்லையப்பா. இங்கிருந்து கிளம்பிவிடு, என்று கோபத்தில் கத்தினார் வித்வான்.
அந்நேரத்தில் வித்வானின் நண்பர் அங்கு வந்தார்.
அவர் வித்வானிடம், “ஏன் கத்துகிறீர்? அவன் சொன்னதில் ஒன்றும் தவறில்லையே! ஸ்ரீ திருஷ்ணாய நம: என்பதும் அந்தப் பகவானையே குறிக்கும். ‘ஸ்ரீ' என்றால் லட்சுமி, ‘திருஷ்ணா’ என்றால் அன்பு கொண்டவன் என்பது பொருள். திருமகளிடம் அன்பு கொண்டவனும் பகவான் கிருஷ்ணன் தானே! என்று விளக்கமளித்தார்.
இளைஞன் சந்தோஷம் அடைந்தான். அவனுக்குக் கிருஷ்ணர் மீது மேலும் பக்தி உண்டானது.