மகாருத்ரம் என்ற காட்டில் தேவகர்ப்ப மகரிஷி ஆஸ்ரமம் இருந்தது. அங்குள்ள தோட்டத்தில் துளசி, மந்தாரை, மல்லிகைச் செடிகள் இருந்தன. சில பசுக்களையும் பராமரித்து வந்தார்.
மங்களகரமான சூழல் நிலவியதால் மகாலட்சுமியின் பார்வை அங்கு விழுந்தது. போதாக்குறைக்கு விஷ்ணுவுக்கு நைவேத்யம் செய்த பாலையே, உணவாக ஏற்பார் மகரிஷி. இதனால் லட்சுமி, அவரை நேரில் காண ஆசிரமத்திற்கே வந்து விட்டாள்.
“மகரிஷியே! உம் பக்தியை மெச்சுகிறேன். செல்வ வளமுடன் வாழ்வீராக!” என வாழ்த்தினாள்.
“தாயே! துறவிக்குச் செல்வம் எதற்கு? பிறப்பற்ற முக்தியே என் விருப்பம்” என்றார். “முற்பிறவியில் செய்த புண்ணியத்தால் நீர் செல்வந்தனாக வாழ்ந்தாக வேண்டும். அதன் பின்னரே உமக்கு முக்தி உண்டாகும்” என்று சொல்லி மறைந்தாள்.
லட்சுமியின் எண்ணத்தை முறியடிக்க வேண்டும் என தீர்மானித்த மகரிஷி ஆஸ்ரமத்தை விட்டு கிளம்பினார்.
ஓரிடத்தில் பல்லக்கு, பரிவாரம், படை வீரர்கள் என பெருங்கூட்டம் இருந்தது. காட்டுக்கு வேட்டையாட வந்த அந்நாட்டின் மன்னர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் ரத்தின கிரீடம் பட்டுத்துணியில் வைக்கப்பட்டிருந்தது. மகரிஷியின் மனதிற்குள் விபரீத எண்ணம் எழுந்தது. 'கிரீடத்தை காலால் உதைத்தால் மன்னரின் கோபத்திற்கு ஆளாகலாம். அதற்குத் தண்டனையாக தன்னைக் கொல்ல மன்னர் உத்தரவிடுவார். அதன் மூலம் லட்சுமியின் ஆசை நிறைவேறாமல் போய்விடும்” என எண்ணினார்.
அதை அறிந்த லட்சுமி, அஷ்ட நாகத்தில் ஒன்றான அனந்தனை அங்கு அனுப்பக் கிரீடத்திற்குள் ஒளிந்து கொண்டான்.
மன்னரை மகரிஷி நெருங்கினார். கிரீடத்தைக் காலால் உதைத்தார். வீரர்கள் மகரிஷியைப் பிடிக்க விரைந்தனர். ஆனால், கிரீடத்திற்குள் இருந்த பாம்பு வெளிப்பட்டுப் புதருக்குள் மறைந்தது.
தனது உயிரைக் காக்கவே, கிரீடத்தை மகரிஷி எட்டி உதைத்திருக்கிறார் எனப் புரிந்து கொண்ட மன்னரும், வீரர்களும், அவர் திருவடியில் விழுந்து நன்றி கூறினர்.
அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்ற மன்னர், மகரிஷியை ராஜகுருவாக ஏற்றார். சகல வசதியுடன் வாழச் செய்தார்.
கொடுக்க நினைத்து விட்டால் துறவிக்குக் கூட லட்சுமி, தேடி வந்து செல்வந்தனாக வாழும் பாக்கியம் தருவாள்.