விவசாயி ஒருவர் தன் மகனுக்கு புத்திமதி சொல்லிவிட்டு உறங்கப் போவார்.
ஒருநாள் ''கடவுள் எங்கும் இருக்கிறார். நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் பார்க்கிறார். அவரிடம் எதையும் மறைக்க முடியாது'' என்றார்.
''அப்பா... என்னால் அவரைப் பார்க்க முடியவில்லையே'' எனக் கேட்டான்.
''நம்மால்தான் அவரைப் பார்க்க முடியாது. ஆனால், அவர் நம்ம எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருக்கார்'' என மீண்டும் தெளிவுபடுத்தினார்.
சிறுவனின் மனதில் இது ஆழமாகப் பதிந்தது. அப்படியே உறங்கிவிட்டான்.
சில ஆண்டுகள் கழிந்தன. மழை பெய்யாததால் பஞ்சம் பிழைக்க மக்கள் வெளியூர் கிளம்பினர்.
விவசாயிக்கு ஊரை விட்டுப் போக மனமில்லை. கையில் இருந்த தானியத்தைச் சிக்கனமாகச் செலவழித்து பிழைப்பு நடத்தினார்.
ஒரு கட்டத்தில் தானியம் தீர்ந்து போக, சாப்பாட்டிற்கு வழியில்லை.
பக்கத்துக் கிராமத்தில் ஒருவரின் வயலில் சோளம் விளைந்திருப்பதாகக் கேள்விப்பட்டார்.
அன்று இரவே அரிவாளும், சாக்குப்பையுமாகத் தயாரானார்.
விழித்திருந்த மகன் ''அப்பா... எங்கேப் போறீங்க..?'' எனக் கேட்டான்.
மகனையும் சேர்த்துக் கொண்டார். இருவரும் பக்கத்துக் கிராமத்தை அடைந்தனர்.
சோளம் பயிரிட்ட வயல் வந்தது.
மகனின் கையைப் பிடித்து ஏற்றி, ஒரு மரக்கிளையில் உட்கார வைத்தார்.
''என்னப்பா பண்ணப் போறீங்க?'' கேட்டான் மகன்.
''ம்...பேசாதே...'' என்றபடி சுற்றிலும் பார்த்தார். ஆள் யாருமில்லை என்பதை உறுதிப்படுத்தி விட்டு, ''சோளத்தை அறுக்கப் போகிறேன்... நீ கவனமாக நாலாபுறமும் பார். யாரும் வந்தா என்னை உஷார் படுத்து'' என்று சொல்லிவிட்டு இறங்கினார்.
அப்பா வயலுக்குள் இறங்கியதும், ''நில்லுங்க ஒருத்தர் பார்க்குறாரு'' எனக் குரல் கொடுத்தான் சிறுவன்.
விவசாயி பரபரப்புடன் மரத்தின் மீது ஏறினார்.
சுற்றிலும் பார்த்தபடி, '' யாரும் தெரியவில்லையே''
''நீங்க சொன்னீங்களேப்பா... எங்கும் நிறைஞ்ச கடவுள் நம்மை கவனிக்கிறார்னு. அப்படின்னா, நீங்க திருடறதையும் அவர் பார்த்துக்கிட்டுத்தானே இருப்பார்?''
தலைகுனிந்த விவசாயி மகனுடன் வீட்டுக்குப் புறப்பட்டார்.