தவத்தில் இருந்த ஒரு மகரிஷி, கண் திறக்காமல் தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது போட்டால், என்ன ஏதென்று பார்க்காமல் அவர் அதை அப்படியே விழுங்கி விடுவார்.
அவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் கனிகள், அப்பம் முதலியவற்றைத் தருவர். அதனால் புண்ணியம் சேருமென அங்கு வரும் பக்தர்கள் நினைத்தனர்.
ஒரு நாள் அந்நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை.
அந்நேரத்தில் மகரிஷி கையை நீட்ட, அவரைக் கேலி செய்யும் நோக்கத்தில், மன்னன் தான் வந்த குதிரை போட்ட சாண உருண்டையை அவரது கையில் வைத்தான்.
மகரிஷியும் அதை அப்படியே வாயில் போட்டுக் கொண்டார்.
மன்னன் சிரித்தபடியே போய்விட்டான்.
மறுநாள் முனிவர் ஒருவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர் “மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும் அதை உண்ண வைப்பர்” எனச் சொல்லி விட்டு சென்றார்.
அதைக் கேட்ட மன்னன் நடுங்கி விட்டான். தர்மம் செய்து, தன் பாவங்களை குறைக்க முடிவெடுத்தான்.
அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்துத் தங்கினான். இளம்பெண்களை வரவழைத்து, அவர்களது திருமணத்திற்கு வேண்டிய நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பி வைத்தான்.
அதை அவ்வூரில் சிலர் வேறுமாதிரியாகக் கதை கட்டினர். “மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்”என்றனர்.
ஒருநாள், பார்வையற்ற கணவரை அழைத்து வந்த ஒரு பெண், அரசனின் குடில் முன்பு நின்று பிச்சை கேட்டாள். அந்தக் கணவன் “நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?” எனக் கேட்டார்.
“அரசன் வீட்டு முன்பு” என்றாள் அந்தப் பெண்.
“ஓ! தானம் கொடுப்பதாக சொல்லிக் கொண்டு பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?” என்றார் அந்த பார்வையற்றவர்.
அந்தப்பெண் அவரது வாயை பொத்தினாள்.
“அன்பரே! என் கற்பின் சக்தியால் நான் முக்காலத்தையும் உணர்ந்தவள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்குக் குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, அவன் உண்ணுவதற்காகத் தயாரானது. அவ்விசயம் அவனுக்குத் தெரிய வரவே, அவன் கன்னியருக்குத் தர்மம் செய்து, நற்போதனைகளைச் செய்தான். ஆனால், அவனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. அவனைப் பற்றி தவறுதலாக பேசி, அதை நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். அடுத்த பிறவியிலும் தாங்கள் பார்வையற்றேப் பிறப்பீர்கள்” என்றாள்.
தவறு செய்தவர்கள் திருந்தும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அப்படிச் செய்தால், அவன் செய்த பாவங்களைப் பங்கு போட்டு கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும்.