கிருஷ்ணருக்கு நெருக்கமான நணபரான உத்தவர் ஒரு முறை கிருஷ்ணரிடம், “கண்ணா... குருசேத்திரப் போருக்கு முன்பாக, பாண்டவர்களுக்காக நீங்கள் அஸ்தினாபுரம் சென்று கவுரவர்களிடம் தூது போனீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் தங்குவதற்காகத் தனது பிரமாண்ட அரண்மனையில் மிகப் பெரிய அறை ஒன்றை துரியோதனன் ஏற்பாடு செய்திருந்தான். பல வகை உணவுகளோடு விருந்தும் தயார் செய்து வைத்திருந்தான். அனைவரும் பிதாமகர் என்று அழைக்கும் பீஷ்மரும் கூட உங்களை அங்கு வந்து தங்கும்படி அழைத்தார். ஆனால் நீங்களோ, துரியோதனனின் அரண்மனையையும், விருந்து உபச்சாரத்தையும் உதறித் தள்ளிவிட்டு, விதுரரின் குடிசையில் போய் தங்கினீர்கள். அதோடு அவர் மனைவி தயார் செய்து வைத்திருந்த மோரை மட்டுமே அருந்திப் பசியாறினீர்கள். துவாரகைக்கு மன்னராக இருக்கும் தாங்கள், அரண்மனையில் தங்காமல், விதுரரின் குடிலில் மனம் உவந்து ஏற்றுக்கொண்டதன் காரணம் என்ன?” என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த கிருஷ்ணர், “என் மனதிற்கு நெருக்கமான உத்தவரே... தடபுடலான விருந்து, தங்குவதற்கு பிரமாண்ட அறை இருந்தும், விதுரரின் குடியில் இருந்த ஒன்று, துரியோதனனின் அரண்மனையில் இல்லையே...” என்றார்.
அதைக் கேட்ட உத்தவர், “கிருஷ்ணா... விதுரரின் குடிசையில் அப்படி என்னதான் இருந்தது? அது ஏன் துரியோதனனின் அரண்மனையில் இல்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
“உத்தவரே... விதுரரின் குடிசையில் இருந்ததும், துரியோதனனின் அரண்மனையில் இல்லாததும் ‘பக்தி’தான். துரியோதனன் எனக்காக நிறைய ஏற்பாடுகளைச் செய்ததோடு, நல்ல விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தாலும், ‘பார்.. நான் உனக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறேன்’ என்று நினைக்கும் ஆணவம் அவனிடம் மிகுந்திருந்தது. பக்தியை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு எனக்காக, விதுரரும், அவர் மனைவியும் அளித்த மோர், என் மனதை குளுமைபடுத்துவதாகவும், என் பசியைப் போக்குவதாகவும் இருந்தது. எப்போதும் பக்தியிடம்தான் திருப்தி அடைகிறேன்” என்றார் கிருஷ்ணர்.