அந்தக் குருகுலமே பரபரப்பானது. சீடர்கள் அனைவரும் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தனர். இவ்வளவு வருடமாக தங்களுக்கு நற்போதனைகளை மட்டுமே கற்பித்து வந்த குருவை, திருட்டுப் பட்டம் சுமத்தி சிறையில் அடைத்துவிட்டார்கள் என்று அறிந்தால் எந்த சீடன்தான் பொறுத்துக் கொண்டு இருப்பான்.
குரு, அரசாங்க வீரர்களால் கைது செய்யப்பட்டு, அரசனின் முன்பாக நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சீடர்கள் அனைவரும் அரண்மனைக்குச் சென்று தங்கள் குருவை விடுவிக்க வேண்டும் என்று கேட்டனர்.
ஆனால், அங்கு விசாரித்ததில், குருவே தான்தான் இந்த குற்றத்தை செய்தேன் என்று ஒப்புக்கொண்டு விட்டதாகவும், அதனால்தான் சிறையில் அடைத்ததாகவும் பதில் அளிக்கப்பட்டது.
சீடர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அவர்களால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை.
ஆறு மாதம் கழிந்தது. சிறையில் இருந்து வெளியே வந்த குரு, அடுத்த சில நாட்களிலேயே வேறு ஒரு குற்றத்திற்காக மீண்டும் சிறை சென்றார். இப்படிச் சின்னச் சின்னக் குற்றங்களைச் செய்வதும், அதன் காரணமாக அடிக்கடி சிறைச்சாலைக்கு செல்வதுமாக இருந்தார். அதனால் அவரை மக்கள் அனைவரும் ‘சிறைச்சாலை குரு’ என்றே அழைக்கத் தொடங்கினர்.
குருவால், அவரது சீடர்கள் மனம் நொந்து போனார்கள்.
ஒரு முறை சிறையில் இருந்து வெளியே வந்த குருவிடம், ‘குருவே! உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள். எதுவாக இருந்தாலும் கொண்டு வந்து உங்களின் காலடியில் குவிக்கிறோம். எதற்காக இப்படித் திருடுகிறீர்கள்? அதுவும் போர்வை, குடை, பாதுகை என்று.. வேண்டாம். உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நாங்கள் கொண்டு வந்து தருகிறோம்’ என்றனர்.
ஆனால் சீடர்கள் இந்தக் கேள்வியை முன் வைக்கும் போதெல்லாம், குருவானவர் புன்னகைத்தபடியே அங்கிருந்து அகன்று விடுவார்.
காலங்கள் கடந்தன. குருவுக்கு இப்போது மிகவும் வயதாகிவிட்டது. உடல் தளர்ந்து படுத்த படுக்கையாகிவிட்டார்.
ஒருநாள் அவரைச் சுற்றியிருந்த சீடர்கள், ‘இப்போதாவது சொல்லுங்கள். எதற்காக அடிக்கடி திருடிவிட்டு சிறைக்குச் சென்றீர்கள்?’ என்றனர்.
‘நீங்கள் அனைவரும் நாகரிக உலகில் வாழ்பவர்கள். உங்களுக்கு வழிகாட்ட என்னைப் போல் ஏராளமான குரு கிடைப்பார்கள். ஆனால் சிறையில் இருப்பவர்களுக்கு, உபதேசம் பெறுவதற்கோ, நல்வழி காட்டுவதற்கோ யாரும் இல்லை. அதனால்தான் அடிக்கடி சிறை சென்றேன். இப்போது அங்கு போய் பாருங்கள். பலரும் திருந்தி நல்வழிக்குத் திரும்பிவிட்டனர்’ என்றார் குரு.
ஆரோக்கியமானவர்களுக்கு மருந்து தேவையில்லை. நோயாளிகளுக்கே அது மிகவும் அவசியமானது என்பதை சீடர்கள் அனைவரும் உணர்ந்து கொண்டனர்.