கிராமத்துக் கோயிலுக்குச் சீடர்களுடன் வந்த துறவி உபன்யாசம் செய்து கொண்டிருந்தார்.
பகவானுக்கு மலர் அபிசேகம் செய்வது குறித்து அன்றைய தலைப்பு அமைந்திருந்தது.
சீடர் ஒருவர் கேட்டார்.
“குருவே! வைணவமாகட்டும், சைவமாகட்டும்... இந்தத் தெய்வத்துக்கு இந்தப் பூக்களால்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று இருக்கிறதே, இதற்குக் காரணம் ஏதும் இருக்கிறதா?”
துறவி பதிலளித்தார்.
“இது காலப்போக்கில் உருவானது. சைவத்தை எடுத்துக் கொள்வோம். வியாக்ரபாத முனிவர், சிவனுக்கு அர்ச்சனை செய்யும் பூக்களில் அழுகல் இருப்பதை அறிந்து, புலிக்காலும், இருளிலும் பார்க்கத்தக்கக் கண்களும் வேண்டிப் பெற்றார். சிறந்த மலர்களால் அபிசேகம் செய்ய வேண்டும் என்பது அவரது எண்ணம். பெருமாளுக்கு ஒரு துளசித்தளம் போதும், சிவனுக்கு வில்வம் போதும். விநாயகருக்கு அருகம்புல் போதும், நரசிம்மர், துர்க்கைக்கு செவ்வரளி போதும். நாம் தான் உயர்ந்த மாலை அணிவிப்போமே என்று ரோஜா மாலையெல்லாம் தொடுக்கிறோம். அது ஆண்டவன் மீது நாம் கொண்ட அன்பை வெளிப்படுத்துகிறது”
துறவியின் இந்த பதிலில் சிறு சந்தேகம் இருக்கவே, சீடர் தொடர்ந்து கேட்டார்.
“சரி... சிறந்த பூக்கள் பல இருக்க வில்வமும், துளசியும், அருகும் மட்டுமே போதுமென ஆண்டவன் ஏன் நினைத்தான்?”
துறவி சிரித்தார்.
“இது புரியவில்லையா உனக்கு? இறைவன் கருணைக்கடல். அந்தக் கருணாமூர்த்திக்கு ரோஜாதான் உகந்த பூ என்று வைத்துக் கொள்வோம். தன் பொருட்டு, ரோஜாவைப் பறிக்கும் போது, பக்தனின் கையில் முள் குத்துமே! இதுகண்டு இறைவனின் மனம் பொறுக்காதே! அதனால், அதுபோன்ற மலர்களை அவன் விரும்பவில்லை. அவற்றில் சொட்டும் தேனைப் பூச்சிகள் குடித்து மகிழட்டுமே என விட்டு வைத்திருக்கிறான். ஆனால், மனிதன் அதைத் தன் சொந்த உபயோகத்துக்கு பறித்துக் கொண்டிருக்கிறான். அப்போது முள் குத்தினால், இறைவன் பொறுப்பாக மாட்டான்''
சீடனுக்குக் குருவின் பதில் பரமதிருப்தியாக இருந்தது.
இன்னொரு சீடன் எழுந்தான்.
“பூக்களை பகவானுக்கு சமர்ப்பிப்பது எப்படி?” என்பது அவனது கேள்வி.
“இதுபற்றி நானே சொல்ல வேண்டுமென இருந்தேன். இறைவனின் பாதங்கள் மிகவும் மென்மையானவை. ராவணனைப் பற்றி சொல்லும் போது, பஞ்செனச் சிவக்கும் மென்கால் தேவியைப் பிரித்த பாவி என்பார்கள். அதாவது, பஞ்சு எனச் சொன்னாலே, சீதையின் கால் சிவந்து விடுமாம். எனவேத் தெய்வங்களின் திருவடியில் பட்டும்படாமல், பூக்களை ஒவ்வொன்றாக எடுத்துப் போட வேண்டும். பூக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது முக்கியமல்ல! ஒற்றைப் பூ போட்டாலும், அது பக்திப்பூவாக இருக்க வேண்டும்” என்றார் துறவி.
சீடர்கள் இந்த பதில் கேட்டு தெளிவு பெற்றனர்.