சனீஸ்வரர் கைலாயத்திற்கு சென்று சிவபெருமானிடம், "உங்கள் ஜாதகப்படி "ஏழரைநாட்டுச் சனி" வர இருக்கிறது, மிகக் கவனமாக இருங்கள் பிரபு" என்றார்.
மேலும், "பூலோகத்தில் உள்ள மனிதர்கள் தங்க ள் ஜாதகத்தைப் பார்த்துத் தங்களுக்கு ஏழரை நாட்டுச் சனி வருவதைக் கணித்துக் கொள்கின்றனர். தாங்களோ இறைவன், அதனால் உங்களுக்கு தெரிவித்துப் போக வந்தேன்" எனக் கூறிச் சென்றார்.
அங்கிருந்த நாரதர், "இந்தச் சனீஸ்வரனுக்கு எவ்வளவு அகந்தை? உலகத்திற்கெல்லாம் படிய ளக்கும் பரமேஸ்வரனையே எச்சரிக்கிறாரே? இவரை என்ன செய்யலாம்?" எனக் கேட்டார்.
சனீஸ்வரனின் கூற்றைப் பொய்யாக்க ஈசன் ஒரு வழியைக் கையாண்டார். கைலாயத்தை விட்டுவிட்டு, ஒரு காட்டிற்குள் சென்று ஒரு புற்றுக்குள் யாருக்கும் தெரியாமல் மறைந்து கொண்டார்.
ஏழரை ஆண்டுகள் கழித்து, புற்றுக்குள் இருந்து வெளியேறிய சிவபெருமான் கைலாயம் சென்றார்.
சில நாட்களுக்குப் பிறகு சிவபெருமானைத் தரிசிக்கச் சென்றார் சனீஸ்வரன்.
அப்போது இறைவன், "சனீஸ்வரா, எனக்கு ஏழரைச்சனி கஷ்டத்தை கொடுக்கும் என்றாயே? எனக்கு எந்தப் பாதிப்பும் வரவில்லையே?” என்றார்.
அதற்குச் சனிபகவான், "இறைவா மன்னிக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு, தன் அருமைக் குழந்தைகள், மனைவியை விட்டுவிட்டு ஏழரை ஆண்டுகள் தனிமைச் சிறையில் கிடப்பது போன்ற கஷ்டம் ஏதுமில்லை. தாங்கள் என் ஏழரைக்குப் பயந்து, கோடிக்கணக்கான சேவகர்களை விட்டுவிட்டு, தனிமைச் சிறையில் புற்றில் கிடந்தீர்களே... இதைவிடப் பாதிப்பு ஏதாவது உண்டா?" எனக் கேட்டார்.
அதற்குச் சிவபெருமான் சிரித்து, இறைவனே என்றாலும் தனது கடமையை சரியாகச் செய்த சனீஸ்வரனின் நேர்மையைப் பாராட்டி ஆசி வழங்கினார்.