ஒரு ஊரில் யாருமில்லாத ஒரு ஏழைப் பெண் இருந்தாள்.
அவளிடமிருந்த மாடுகளிடமிருந்து பாலைக் கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுத்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்ந்து வந்தாள்.
ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆசிரமத்துக்கும் அவள்தான் தினசரி பால் கொடுத்து வந்தாள்.
ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் அமர்ந்தார். ஆனால், நைவேத்தியத்துக்குத் தேவையான பால் இன்னும் வரவில்லை.
இந்தப் பால் கொண்டு வரும் பெண் அடிக்கடி தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொண்ட அவர், அந்த பெண்ணிடம், “அம்மா… உன்னாலே ஒழுங்காகச் சரியான நேரத்துக்குப் பால் கொண்டு வர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே காலதாமதமாகிறது” என்று கடிந்து கொண்டார்.
“சுவாமி என்னை மன்னிக்க வேண்டும். நான் என்ன பண்ணுவேன்? நான் வீட்டை விட்டுச் சீக்கிரமாகத்தான் கிளம்பினேன். ஆனால், இங்கே வருவதற்குக் கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது” என்றாள்.
அதைக் கேட்ட அந்தச் சன்னியாசி, “ஆற்றைக் கடப்பதற்குப் படகுக்குக் காத்திருக்கிறாயா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே “கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்று சொல்லிக் கொண்டே தாண்டி விடுகிறான். நீ ஆற்றைக் கடப்பதைப் பெரிய கடினமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாயே, இனிமேல் எனக்கு விரைவாகப் பால் கொடுக்க முடிந்தால் கொடு, இல்லையேல், எனக்குப் பால் வேண்டாம்” என்று கூறினார்.
அவர் விளையாட்டாக சொன்னதை, அந்தப் பெண் மிகவும் தீவிரமாக பயபக்தியுடன் கேட்டுக் கொண்டாள்.
மறுநாளிலிருந்து சரியாகக் குறித்த நேரத்துக்குப் பால் கொண்டு வரத் தொடங்கினாள்.
அந்தச் சன்னியாசிக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவர் அவளிடம், “இப்போதெல்லாம் சரியான நேரத்துக்குப் பாலைக் கொண்டு வந்து விடுகிறாயே, எப்படி?”என்றார்.
“எல்லாம் நீங்கள் சொல்லிக் கொடுத்த மந்திரம்தான் சுவாமி…. அதன் மூலமாகத்தான் நான் ஆற்றை விரைவாகக் கடந்து வந்து விடுகிறேன். இப்போதெல்லாம், நான் படகுக்காகக் காத்திருப்பதில்லை” என்றாள் அந்த பெண்.
“நான் உனக்கு சொல்லிக் கொடுத்த மந்திரமா? அதை வைத்து ஆற்றைக் கடக்கிறாயா? என்னால் நம்பமுடியவில்லையே…” என்ற சந்நியாசி அவள் ஆற்றைக் கடப்பதைத் தான் நேரில் பார்க்க வேண்டும் என்றார்.
உடனே அவள் சன்னியாசியுடன் ஆற்றின் கரைக்குச் சென்றாள்.
சன்னியாசி அவளைப் பார்த்து, “ஆற்றைக் கடந்து காண்பி பார்க்கலாம்” என்றார்.
அந்தப் பால்காரப் பெண், கை இரண்டும் கூப்பியபடி “கிருஷ்ணா, கிருஷ்ணா” என்று கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்தாள்.
அவள் ஆற்றின் மேல் நடந்து சென்றதைப் பார்த்த சன்னியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும், மறுபக்கம் தயக்கமாகவும் இருந்தது.
“ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியவில்லையே… தவிர, கால் தண்ணீருக்குள்ளேப் போய் விட்டால் என்ன செய்வது? ஆடை நனைந்துவிடுமே…? என்று யோசித்தபடியே, சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்ன்றார்.
அவரது கால் தண்ணீருக்குள்ளே சென்றது.
சன்னியாசி திடுக்கிட்டு அந்தப் பெண்ணிடம், “அம்மா உன்னால் செய்ய முடிந்தது, என்னால் செய்ய முடியவில்லையே…?” என்று கேட்டார்.
அந்தப் பெண் பணிவுடன், “சுவாமி… உங்க உதடு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க உடை நனையக் கூடாதுன்னு தூக்கி பிடித்திருகிறதே…? தவிர, ஆற்றோட ஆழத்தைப் பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்லவா இருக்கிறது” என்றாள்.
அதனைக் கேட்ட சன்னியாசி வெட்கித் தலைகுனிந்து நின்றார்.
கடவுள் மேல் நமது நம்பிக்கை வெறும் உதட்டளவில் இல்லாமல், உள்ளத்தில் இருந்து வந்ததாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவான் அந்த மாயக்கண்ணன் என்பதையும் உணர்ந்தார்.