கடவுள் பக்தி நிறைந்த ஒரு கணவனும் மனைவியும் “இன்பச் சுற்றுலா” சென்றனர்.
அங்கு ஏரியைப் பார்த்த மனைவி தன் கணவனிடம், “நாம் இருவர் மட்டும் தனியாகப் படகு சவாரி போகலாமா?” எனக் கேட்கிறாள்.
கணவனும் தன் மனைவியின் ஆசைக்காகச் சரி என்று சொல்ல, இருவரும் சிறிது தூரம் படகில் சென்றனர்.
அப்போது வானிலை சிறிது சிறிதாக மாறுகிறது. பிறகு மெல்லமெல்லக் காற்று வீச வேகமெடுத்துப் பலமாகக் காற்று வீசக் கருமேகம் சூழ நெஞ்சு பதறும் அளவிற்கு இடி இடித்தது. மின்னல் வந்தது.
அதனைக் கண்டு மிகவும் பயந்துபோனவள் ஓடிவந்து கணவன் அருகில் அமர்ந்துகொண்டு, “எனக்குப் பயமாக இருக்கிறது... துடுப்பை வேகமாகச் செலுத்துங்கள்... சீக்கிரம் கரைக்குப் போய் விடலாம்” என்றாள்.
மனைவியைப் பார்த்துச் சிரித்த கணவன், “உனக்குப் பயமாக இருக்கிறதா? ஒரு நிமிடம்…” எனக் கூறித் தன் பையில் ஆப்பிள் வெட்ட வைத்திருந்த ஒரு கூர்மையான கத்தியை எடுத்துத் தன் மனைவியின் கழுத்தை நோக்கி நீட்டினான்.
அவளோ பயமில்லாது, தன் கணவனைப் பார்த்துச் சிரித்தாள். “இந்த நேரத்தில் என்ன விளையாட்டு இது?” என்று அந்த மழை நேரத்திலும் மென்மையாகச் சிரித்தாள்.
“ஏன் சிரிக்கிறாய்? இது எவ்வளவு கூர்மையான கத்தி தெரியுமா? உனக்கு இதைக் கண்டு பயமாக இல்லையா?” என்று கணவன் கேட்டான்.
“கத்தி கூர்மையானதுதான். ஆனால், அதைத் தன் வசம் வைத்திருப்பது என் அன்புக்குரியவராச்சே, நான் நேசிக்கும் ஒருவர் எனக்கு எப்படித் தீங்கு செய்வார்?” என மிக மெலிதாகச் சொன்னாள் அவள்.
கத்தியைத் தன் கைப்பையினுள்ளேப் போட்ட கணவன், மனைவியின் கன்னம் தொட்டுச் சொன்னான், “அன்பே! இந்தக் காற்றும் புயல் வருவது போல் இருக்கும் இந்த அறிகுறிகளும் மிக ஆபத்தானது போலத்தான் தோன்றும். ஆனால், இவற்றை எல்லாம் தன் வசம் வைத்திருக்கும் அந்த “ஆண்டவன்” என் அன்புக்குரியவனாயிற்றே. நான் நேசிக்கும் அவன் என்னையும் உன்னையும் எப்படி அவன் துன்புறுத்துவான்?” என்றான்.
பின்னர் அவன் தொடர்ந்து, “பக்தி மனதில் இருந்தால் மட்டும் போதாது சோதனைகளின் போதும் அது உறுதியாக இருக்க வேண்டும். நம் பக்தியைச் சோதிக்க இதுவும் சோதனைகள்தான்… யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத யாரையும் எந்தக் கஷ்டமும் ஒன்றும் செய்யாது” என்றான்.
சிறிது நேரத்தில் கரு மேகங்கள் களைந்து, சூரியன் முகம் காட்டி, காற்று சாந்தமானது, சூழ்நிலை மாறியது.
இறை நம்பிக்கை மட்டுமே நம் வாழ்க்கையின் எல்லாத் துன்பத்திற்கும் கிடைக்கும் ஒரே நிவாரணம், அந்த நம்பிக்கையோடு நல்லவர்களாக நடை பயிலுங்கள்…