ஒரு ஊரிலே மகாமுரடன் ஒருவன் இருந்தான்.
அவன் ஒருநாள் தெருவில் உயர்ந்த குதிரை மேல் அமர்ந்தபடி சென்று கொண்டிருந்தான். அவனிடம் ஒரு குதிரையை இழுத்துக் கொண்டு ஒரு வியாபாரி வந்தான்.
"ஐயா, இந்தக் குதிரை பத்து வராகன் வாங்கிக் கொள்கிறீர்களா?" என்று கேட்டான்.
முரடனுக்குப் பேராசை. ஆயிரம் வராகன் விலை பெரும் குதிரையை வெறும் பத்து வராகனுக்குத் தருவதாகச் சொல்கிறானே என்று சற்றும் யோசிக்கவில்லை அந்த முரடன்.
அவன்தான் முரடனாயிற்றே. யோசிப்பானா?அதனால் பத்து வராகன் கொடுத்துக் குதிரையை வாங்கிக் கொண்டு தன் குதிரையை அவனிடம் சற்று பிடித்துக் கொள் எனக் கூறிவிட்டுத் தான் புதிதாக வாங்கிய குதிரை மேல் ஏறிப் புறப்பட்டான் சவாரி செய்து பார்க்க.
அப்போது அந்தக் குதிரை வியாபாரி, "ஐயா, என் குதிரைக்குக் கடிவாளம் வேண்டாம். வார்த்தை ஒன்று போதும். அப்பாடா என்று சொன்னால் ஓடும். கடவுளே என்றால் நின்று விடும்" என்றான்.
அதைகேட்ட முரடன் குதிரை மீது ஏறி அமர்ந்து, “அப்பாடா” என்றான். குதிரை பிய்த்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.
சற்று நேரம் மகிழ்ச்சியாக உலா வந்தான். நேரமாக ஆகக் குதிரை நிற்கக் காணோம்.
அதை நிறுத்த மிகவும் முயன்றான் முரடன். ஆனால் அந்தக் குதிரையோ காடு மேடு நோக்கி ஓடியது. ஏய் நில்லு நில்லு,என்று என்னென்னவோ சொற்களைச் சொல்லிப் பார்த்தான்.
குதிரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது. குதிரைக்காரன் சொன்ன வார்த்தையை முரடன் மறந்து விட்டான்.
குதிரை ஒரு உயரமான மலையை நோக்கி ஓடியது உச்சிக்கேச் சென்று விட்டது.
முரடன் அச்சத்தில் நாம் சாகப்போகிறோம் என்று முடிவு செய்தான். கடைசியாக “கடவுளே” என்று கடவுளை அழைத்தான்.
குதிரை சட்டென்று நின்றது.
அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட முரடன், “அப்பாடா” என்றான்.
அப்புறம் என்ன நடந்திருக்கும்?