ஒரு தீவில் ஒரு மீனவன் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தான். தினமும் அதிகாலையில் தன் படகில் சென்று மதியத்துக்குள்ளாகவேத் தேவையான அளவு மீன்களைப் பிடித்து வந்து அருகில் உள்ள கிராமங்களில் விற்று விட்டு போதிய பொருட்களுடன் வீடு திரும்புவான். மதியத்துக்கு மேல் தன் மனைவி குழந்தைகளுடன் சந்தோசமாக மீதிப் பொழுதைக் கழிப்பான்.
ஒரு நாள் அந்தத் தீவைச் சுற்றிப் பார்க்க விரும்பிய, அருகாமையிலுள்ள நகரத்தைச் சேர்த்த பயணி ஒருவர் அவனது படகிலேறி தீவுகளைப் பார்த்தார்.
அவர் அவனிடம், அவனது வாழ்க்கை பற்றி விசாரித்தார். மீனவனும், தனது அன்றாட வாழக்கையை விவரித்தான்.
அப்போது,
பயணி: தினமும் மதியத்துக்குள்ளாகவே திரும்புகிறாயே… இன்னும் சற்று நேரம் கூடுதலாக மீன் பிடித்தால் அதிக வருவாய் கிடைக்குமே ..!
மீனவன்: அதிகப் பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறேன்?
பயணி: அதிகப் பணத்தில் இன்னொரு படகு வாங்கலாம், அதைப் பயன்படுத்தி நிறைய மீன் பிடிக்கலாம்.
மீனவன்: மீன் பிடித்து...?
பயணி: அவற்றை மிகுந்த பொருளுக்கு விற்றால், பெரிய மீன்பிடி கப்பல் வாங்கும் அளவுக்குப் பணம் கிடைக்கும்.
மீனவன்: சரி, அப்புறம்...
பயணி: நீயே பெரிய மீன் சந்தையை உருவாக்கி, மீன்களை மொத்தமாக விற்றுப் பெரும் பணம் சம்பாதிக்கலாம்.
மீனவன்: சரி பிறகு...?
பயணி: பிறகு என்ன அந்தப் பெரும் பணத்தைக் கொண்டு, மனைவி, குழந்தைகளைச் சந்தோசமாக வைத்திருக்கலாம், நீயும் மகிழ்ந்திருக்கலாம்.
அப்போது மீனவன் சொன்னான், “அப்படிதானே இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்”
அதற்குப் பின்பு, அந்தப் பயணிக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.
தேவைக்கு மேல் பொருள் சேர்ப்பது கூட அடுத்தவருக்குப் போய்ட் சேரவேண்டிய பொருளைத் திருடி வைத்துக் கொள்வதற்குச் சமமே...!