ஒருநாள் அக்பர், பீர்பாலுடன் பொழுதுபோக்காகப் பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் பலவேறு விஷயங்களைப் பற்றிப் பேசினர்.
அப்பேச்சிற்கு இடையே அகபர், ''பீர்பால்! உலகத்தில் மெய், பொய் என்னும் இரு விஷயங்கள் மக்கள் மத்தியிலே அதிகமாகப் பேசப்படுகின்றன. பொய்க்கு நேர் விரோதமான ஒன்று மெய் என்று பொதுவாக கூறப்படுகிறது. எனக்கு ஓர் ஐயப்பாடு. தத்துவரீதியாகச் சிந்தித்துப் பார்த்தால், மெய் என்பது என்ன? பொய் என்பது என்ன? இதைப் பற்றி விளக்க இயலுமா?'' என்றார்.
''மெய்க்கும், பொய்க்கும் உள்ள தூரம் ஏறத்தாழ நான்கு விரற்கடை அளவுதான் '' என்று பீர்பால் பதிலளித்தார்.
''மெய்யையும், பொய்யையும் நீ அளக்கும் அளவுகோலே வியப்பாக இருக்கிறதே! சற்று விளக்கமாக, எனக்குப் புரியும் வகையில் சொல்'' என்றார் அக்பர்.
“மன்னர் பெருமானே ! நாம் கண்களால் பெரும்பாலும் மெய்யைத்தான் காண முடியும். ஆனால், காதுகளால் பொய்யை அதிக அளவு கேட்கிறோம். கண்ணுக்கும் காதுக்கும் உள்ள இடைவெளி ஏறத்தாழ நான்கு விரற்கடை அளவுதானே!'' என்று பதிலளித்தார் பீர்பால்.