ஒரு ஊரில் குகன் என்ற ஜமீந்தார் இருந்தார். நல்ல செல்வந்தர். ஊரில் உள்ள மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் உடனே ஒடோடிப் போய் செய்வார். நல்ல பக்திமான்.
பல அறக்கட்டளைகளை நடத்தி வந்தார். எந்தச் சூழ்நிலையிலும் கோபத்தை வெளிப்படுத்த மாட்டார்.
ஆனால் ஒரு விஷயத்தை கையிலெடுத்தார் என்றால் அவர்தான் தீர்ப்பு சொல்லுவார். அவர் கூறிவிட்டால் மறுவார்த்தை சொல்லாமல் மக்களும் ஒத்துக் கொண்டு போய்விடுவர்.
அவர் பெயரில் ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், திருமண மண்டபம், கல்லூரி என பல இருந்தன. ஆனால் அன்னதானத்திற்கு மட்டும் அவர் தன்வீட்டிலேதான் செய்வார். எதற்கு என்றால் யார் எப்படி சாப்பிடுகிறார்கள், அவர்களுக்கு என்ன தேவை என அறிய முடியும் என்று அடிக்கடி கூறுவார்.
இந்த அன்னதானம் செய்வதற்கு முன்பு, தினமும் ஒரு வாய் கூட தண்ணீர் குடிக்காமல் விரதம் இருந்து, பூஜை செய்து, நன்றாக பிரார்த்தனை செய்வார். அவர் காலையில் 6 மணிக்கு தொடக்கி மதியம் 1 மணிக்கு முடிப்பார். பூஜை முடித்த பின்னரே சாப்பாடு போடுவார். இவர் முடிப்பதற்கு முன்னரே எல்லா பதார்த்தங்களும் சரியாக திண்ணைக்கு வந்துவிடும். முடியாத மக்களும் சரியாக வரிசையில் நின்று விடுவர்.
இந்த சாப்பாடு திண்ணைக்கு வந்து 2 மணி நேரம் ஆனவுடனே தான் அன்னதானம் தொடங்கும்.
மக்களுக்கு இந்த சாப்பாடு வாசனையினால் இன்னும் பசி அதிகமாக எடுக்கும். இவர் எப்ப பூஜை முடித்து எப்படா போடுவார் என்று காத்துக் கொண்டு இருப்பர்.
இவர் வந்து தொடங்கினவுடனே மக்களும் நிம்மதி அடைவர். இந்த நிகழ்ச்சி எல்லா நாளும் இப்படித்தான் நடக்கும்.
மக்களுக்கு என்ன வருத்தம் என்றால் இவர் பாட்டுக்கு பூஜை செய்யட்டும். எங்களுக்கு சீக்கிரம் அன்னதானம் போட்டால் தேவலை என்று நினைத்தனர். ஆனால் இவருக்கு யார் அறிவுரை வழங்குவது என்று தெரியவில்லை. இருந்தாலும் இவரால் ஒருவேளை சாப்பாடு கிடைப்பதால் பேசாமல் இருந்தனர்.
இப்படியே நாட்கள் கடந்த நிலையில், அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவருக்கு மருத்துவம், சாஸ்திரம், என பல விஷயங்கள் தெரியும்.
இந்த ஜமீன்தரை பற்றி கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் மக்கள் அவரிடம் உள்ள குறையை மட்டும் இந்த துறவியிடம் சொல்ல பயப்பட்டனர்.
அவரும் அவர் போடுகிற சாப்பாட்டை சாப்பிட வந்தார். மக்கள் புலம்புவதை பார்த்து அமைதியாக இருந்தார். இந்த துறவியும் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டார்.
ஒரு நாள் இந்த ஜமீன்தாருக்கு தீராத வயிற்று வலி. எததனையோ வைத்தியம் பார்த்தும் வலி குறையவில்லை.
இந்தத் துறவியைப் பற்றி அவருடைய நண்பர் ஒருவர் சொன்னவுடன் அவரிடம் வைத்தியம் செய்யலாம் என்று முடிவு செய்தார்.
அந்தத் துறவி வீட்டிற்குச் சென்றார். இவர் போய் அரைமணியில் அனைத்து விதமான மருந்துகளும் தயாராக இருந்தது. ஆனால் அந்தத் துறவி சரியாக மூணு மணி நேரம் கழித்து மருந்து கொடுத்தார். அதற்குள் இந்த ஜமீன்தார் துடித்துப் போய் விட்டார். தொடர்ந்து இதே போல் ஒரு வாரம் வரச் சொன்னார். இதே நேரம் ஆகிவிட்டது.
ஒரு வாரம் கழித்து அவருக்கு குணமாகிவிட்டது. இருந்தாலும் அவருக்குத் துறவி மேல் கோபம் இருந்தது.
ஒருநாள் அவர் வீட்டுக்கு வந்து ஜமீன்தார் கேட்டார். என்ன துறவின்னு சொல்லறீங்க. ஆனா ஒரு வாரமா இந்த மருந்தைக் கொடுத்தீங்க. சரியான நேரத்தில கொடுத்து இருந்தா நேரம் விரயம் ஆகி இருக்காது என்று சொன்னார்.
துறவி சொன்னார் எல்லா விஷயத்தையும் நேரம் கடத்தாம செய்தா யாருக்கும் தொந்திரவு வராது.
நீங்களும்தான் அன்னதானம் போடுகிறீர்கள். ஆனால் முன் கூட்டியே சாப்பாடு உங்க திண்ணைக்கு வந்திடுது. ஆனா மக்கள் நீங்க விரதம் முடிச்சு எப்படா சாப்பாடு போடுவீங்கன்னு காத்துகிட்டு இருக்காங்க.
ஒரு வாரம் வயித்தவலி உங்களால தாங்க முடியல. மக்கள் மட்டும் எப்படி பசிய தாங்குவாங்க. என்னைக்குமே ஆறின கஞ்சி பழங்கஞ்சி தான். நீங்க எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் விரதம் இருங்க. ஆனா மக்களுக்கு சரியான நேரத்தில சாப்பாடு போடுங்க.
கடவுள் பஞ்ச பூதத்தில் இருக்காருன்னு சொல்கிறோம். என்னைக்காவது அரை மணி நேரம் ஓய்வில இருந்துருக்கா?. எல்லாமே கடவுள் கொடுத்ததுதான்.
கடவுளால படைக்கப்பட்ட பொருள் எல்லாத்தையும் மனுஷன்தான் தன் கட்டுப்பாட்டில வைத்து உரிமை கொண்டாடுகிறான். எல்லாரும் விரதம் இருக்கிறது எதற்கு என்றால், மனசு எப்பவும் அலை பாயும். அதை ஒரு நிலையில் கொண்டு வரணும் என்றால் நமக்கு நாமே ஒரு கட்டுப்பாடு விதித்துக் கொண்டு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான். அடுத்தவர்கள் மனதால் நோகடிக்காமல் இருந்தாலே, அதுதான் நாம் கடவுள் பெயரால் செய்கின்ற விரதம். எனவே நீங்க விரதம் இருங்க. அன்னதானம் ஒரு பக்கம் நடக்கட்டும் என்று துறவி சொன்னார்.
ஜமீன்தார் மன்னிப்பு கேட்டு, விடை பெற்றார்.