ஒருவனிடம் ஒரு ஓட்டைக் காலணா காசு கிடைத்தது.
சகுனங்களிலும், அதிர்ஷ்டத்திலும் அதிக நம்பிக்கைக் கொண்ட அவன், அந்த காசு கிடைத்த நேரம் மிகவும் அதிர்ஷ்டமானது என நம்பி அதை தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான்.
அந்த நாணயத்தால் தன் வெற்றி நிச்சயம் என நம்பினான். எல்லோரும் பாராட்டும்படி வேலை செய்தான். எல்லா பிரச்சனைகளுக்கும் சுலபமாகத் தீர்வு கண்டான்.
தினமும் வேலைக்குச் செல்லும் போது அந்த நாணயத்தை தன் மணிபர்ஸில் தன் மனைவி வைத்து விட்டாளா என்று கேட்டு உறுதி செய்து, நம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக சென்றான்.
வாழ்வில் பல படிகள் முன்னேறினான்.
ஒருநாள் தன் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவிய அந்த அதிர்ஷ்ட நாணயத்தை எடுத்துப் பூஜையறையில் வைத்து வழிபட நினைத்தான்.
தனது மணிபர்ஸை எடுத்தான். அவசர அவசரமாக அவன் மனைவி ஓடி வந்து தடுத்தாள். அதெல்லாம் வேண்டாம்… மணி பர்ஸிலேயே இருக்கட்டும் என்றாள்.
அவளது பேச்சைக் கேட்காமல், மணி பர்ஸிலிருந்து அந்த நாணயத்தை வெளியே எடுத்தவன் அதிர்ந்தான்.
அந்த நாணயத்தில் துளையில்லை. மேலும் புத்தம் புதிதாக வேறு நாணயமாக இருந்தது.
அதைப்பற்றி மனைவியிடம் கேட்டபோது, பலநாட்களுக்கு முன்னால் அந்தச் சட்டையை எடுத்து உதறிய போது, அந்த நாணயம் உருண்டோடி காணாமல் போனது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவன் வருத்தப்படுவான் என நினைத்து வேறு ஒரு நாணயத்தை மணி பர்ஸில் மாற்றி வைத்து விட்டதாகச் சொன்னாள்.
அதிர்ஷ்டமான நாணயம் தன்னிடம் இருக்கின்றது என்ற நம்பிக்கை கொடுத்த பலம் தான் உங்களுக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது. உண்மையில் இந்த வெற்றி உங்கள் உழைப்பினால் வந்தது. உங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது மட்டும் தான் அதிர்ஷ்டத்தின் வேலை. அதனால், எப்போதும் போல இனி நம்பிக்கையுடன் உழைத்து வாருங்கள். நம்பிக்கையுடன் உண்மையாக உழைப்பவர்களுக்குக் கடவுள் என்றும் வெற்றியைத்தான் பரிசாகத் தருவார்’ என்று அவனது மனக்கண்களைத் திறந்து வைத்தாள் மனைவி.