அரசர் ஒருவர், பகைவர்கள் பலரையும் வென்று, ’விஸ்வஜித்’ என்ற வேள்வியைச் செய்தார்.
அப்போது, தன்னிடம் இருந்த செல்வம் முழுவதையும் ஏழை, எளியவர்களுக்கு வாரி வழங்கி விட்டார்.
அரண்மனையின் பொக்கிஷ அறை காலியாகி, காற்று உலாவிக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில்... அரசரைத் தேடி, கவுத்சர் என்ற முனிவர் வந்தார். அரசரும் வந்தவரை வணங்கி உபசரித்தார்.
முனிவர், தன் வருகைக்கான காரணத்தை கூறத் தொடங்கினார்.
“மன்னா... தூய்மையான மனம் படைத்தவர் நீங்கள். அப்படிப்பட்ட நீங்கள், செல்வம் ஏதும் இல்லாமல் இருக்கும் இந்த நிலையில், நான் செல்வம் தேடி, உங்களிடம் வந்ததை எண்ணி, என் மனம் மிகவும் வருந்துகிறது. வரதந்து முனிவரிடம் கல்வி கற்றபின், குருதட்சணையைப் பற்றிக் கேட்டேன். அவர் வேண்டாம் என்று மறுத்தார். நான் அவரிடம் விடாமல் நிர்பந்தம் செய்தேன். என் குருநாதருக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் 14 கோடிப் பொன் கொண்டு வரும்படி உத்தரவிட்டுவிட்டார். அந்தப் பொன் வேண்டியே, நான் இங்கு வந்தேன். இந்த நிலையில் உங்களுக்குத் தொல்லை கொடுக்கக் கூடாது, நான் வேறு எங்காவது முயற்சி செய்கிறேன்...”
அதனைக் கேட்ட அரசர், “என்னைத் தேடி வந்த உங்களை வெறும் கையோடு அனுப்ப மாட்டேன். இரண்டு அல்லது மூன்று நாட்கள், இங்கே அரண்மனையில் தங்கியிருங்கள். அதற்குள், நான் ஏற்பாடு செய்கிறேன்...” என்றார்.
முனிவரும் அங்கே தங்கி விட்டார்.
மறுநாள் அதிகாலையில்... குபேரனைச் சந்தித்து, பொருள் கொண்டு வரும் நோக்கத்தோடு அரசர் புறப்படத் தயாரான போது, பொக்கிஷ அதிகாரிகள் வந்து, “அரசே... நேற்றிரவு, நம் கருவூல அறையில், குபேரன் பொன்மாரி பொழிந்திருக்கிறார்...” என்றனர்.
மன்னர் உடனேத் தனது பயணத்தை நிறுத்தி, குபேரன் தந்த பொன் முழுவதையும் முனிவருக்குத் தந்தார்.
அந்த முனிவரும் மனம் மகிழ்ந்தார்.
“மன்னா... உங்களுக்கு உத்தமமான புதல்வன் பிறப்பான்...” என்று ஆசி கூறிவிட்டுச் சென்றார்.
அந்த ஆசியின் பலனாக அவருக்கு, உத்தமமான அந்த அரசர் ரகு பிறந்தார். அவருக்கு அஜன் என்பவர் பிள்ளையாகக் பிறந்தார். அஜனுக்குத் தசரதன் மகனாகப் பிறந்தார். தசரதனுக்கு இறைவன் விஷ்ணுவே மகனாக, ஸ்ரீராமராகப் பிறந்தார்.