முந்தையக் காலங்களில் கிராமத்துக்குக் கிராமம் சில வழக்கங்களும் நடைமுறைகளும் வேறுபட்டிருக்கும்.
இப்படியான ஒரு கிராமத்தில் குடும்பத்திலுள்ள ஆண் பிள்ளைகள் பதினாறு வயதை அடைந்ததும், ஒரு இரவு காட்டில் தங்க வேண்டும் என்கிற வழக்கமிருந்தது. காட்டிலிருக்கும் கொடிய மிருகங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்து, மறுநாள் கிராமத்துக்குத் திரும்ப வேண்டும் என்றும், அதற்காக, அவர்களது பதினைந்தாவது வயதில் வில் பயிற்சி, ஈட்டி எறிதல், விலங்குகளைத் தாக்கித் தப்பித்தல் போன்ற தற்காப்புக் கலைகள் அனைத்தையும் சொல்லிக் கொடுப்பார்கள்.
அந்தக் கிராமத்திலிருந்த ஒரு குடியானவன் மகனுக்குப் பதினாறாவது பிறந்த நாள் வந்தது. மறுநாள் அவன் காட்டுக்குச் செல்ல வேண்டும். முதல் நாள் அந்தக் குடியானவன் பல புத்திமதிகள், யுக்திகளை மீண்டும் மீண்டும் அவனுக்கு நினைவுபடுத்தினான்.
மறுநாள், மாலையானதும் தந்தை அவனைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார். மகன் கண் கலங்கியவாறேத் தந்தையுடன் சென்றான்.
அங்கே ஒரு நிழல் மரத்தின் கீழே இருக்க விட்டு, தந்தை வீட்டுக்குச் செல்வதாக கூறி வந்து விட்டார்.
மாலை இரவானது. வானத்தில் நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கி விட்டன. எங்கும் ஒரே இருட்டு. அவனோத் தூக்கமின்றி விழித்துக் கொண்டிருந்தான். பயத்தாலும் தனிமையாலும்... நேரம் ஓடிக் கொண்டு இருந்தது. ஒரு வழியாக இரவு கடந்து, பொழுது புலரத் தொடங்கிவிட்டது.
தூரத்தில் ஒரு வேடன் வில்லும் அம்புகளும் கொண்டு வருவதைக் கண்டான். அவனுக்குப் பயமாக இருந்தது.
அந்த உருவம் அருகில் வந்த போது, அது அப்பாவின் நடை போன்று இருந்தது. மிக அருகில் வந்த பின்புதான், அது அப்பா என்பதும், அவர் வேடன் வேடத்தில் வந்திருப்பதும் தெரிந்தது.
அவன் அப்பாவைக் கட்டித் தழுவி அழுதான்.
அப்பா அவனிடம், “நன்றாகத் தூங்கினாயா?” என்று கேடடார்.
“இல்லையப்பா... இரவில் பயத்துடன் எப்படித் தூங்க முடியும்?” என்றான்.
“மகனே, நான் இரவு முழுதும் தூங்காமல் இங்குதான் இருந்தேன். அதோ சிறிது தொலைவிலுள்ள அந்த மரத்தில் தங்கிதான் நான் உனக்குக் காவல் இருந்தேன்" என்றார்.
“அதை நேற்றைக்கேச் சொல்லியிருக்கலாமே, நான் நன்றாகத் தூங்கி இருப்பேனே...” என்றான் மகன்.