ஒரு பணக்காரன் தன்னுடைய கணக்குப் பிள்ளையிடம் விசாரித்தான்.
“நமக்கு எவ்வளவு சொத்து இருக்கும்...?”
“பதினாறு தலைமுறைக்கு உட்கார்ந்தேச் சாப்பிடலாம்...” என்று அதற்குக் கணக்குப்பிள்ளை பதில் சொன்னார்.
அந்தப் பணக்காரன் கவலையில் ஆழ்ந்தான்.
“ஐயோ... பதினாறு தலைமுறைக்குத்தான் வருமா? அப்படியானால், என்னுடைய பதினேழாவது தலைமுறை என்ன ஆகும்...?” என்று கவலைப்படத் தொடங்கினான்.
அந்தக் கவலையில் அவன், மிகவும் நோய் வாய்ப்பட்டான்... ஊரில் உள்ள அனைத்து மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டு மருத்துவம் செய்தும், அவனுடைய நோய் குணமாகவில்லை.
அந்த சமயத்தில், ஒரு யோகி அவ்வூருக்கு வந்தார்.
அவர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு, அந்தப் பணக்காரனைச் சந்தித்தார்.
“ஐயா... உன் ஊரிலோ, அல்லது பக்கத்து ஊரிலோ இருக்கும் ஓரிரு பச்சிளம் குழந்தைகளுடன் கூடிய இளம் விதவையைத் தேடி கண்டுபிடி... முக்கியமாக, அவள் தினசரி கூலி வேலைக்குக் போய்த்தான்... சாப்பிட வேண்டிய நிலையில் இருக்க வேண்டும்... இரண்டு வண்டிகள் நிறைய உணவு தானியங்களை அவளுக்கு அனுப்பு... அப்புறம் என்னிடம் வா... உன்னுடைய வியாதிக்கு நான் மருந்து தருகிறேன்” என்றார்.
அந்தப் பணக்காரனும் அப்படி ஒரு இளம் விதவையைத் தேடிப்பிடிக்கும்படி தனது வீட்டு வேலைக்காரனிடம் சொன்னார். அவனும் பக்கத்து ஊரிலிருந்த இளம் விதவயைக் கண்டறிந்து வந்து சொன்னான்.
உடனே அந்தப் பணககாரன், மறுநாள், அந்த இளம் விதவையின் வீட்டுக்கு இரண்டு வண்டி தானியங்களைத் தன் வீட்டு வேலைக்காரனைக் கொண்டு செல்லச் சொன்னான்.
தன்னுடைய வீட்டு முன் இரண்டு வண்டிகள் வந்து நிற்பதை பார்த்த அந்த இளம் விதவை என்னவென விசாரித்தாள்.
அவனும், தனது முதலாளி, உணவு, தானியங்களை வண்டியில் அனுப்பியதைச் சொன்னான்.
உடனே அவள், தன்னுடைய மகளிடம், "நம் வீட்டில் அரிசி பானையில் எவ்வளவு அரிசி இருக்கிறது எனப் பார்க்கச் சொன்னாள்”
அவளது மகளான சிறுமி உள்ளிருந்து, “இரண்டு மூன்று நாளைக்கு சமைக்கலாம் அம்மா...” என்றாள்.
உடனே அந்த இளம் விதவை, வண்டிக்காரர்களிடம் சொன்னாள்.
“எங்களுக்கு மூன்று நாட்களுக்குத் தேவையான உணவு இருக்கிறது... இப்போதைக்கு இதுபோதும்.. தேவைப்பட்டால் நாங்களேக் கேட்கிறோம்...” என்று சொல்லி அந்த இரு வண்டிகளையும் திருப்பி அனுப்பி விட்டாள்.
திரும்பிச் சென்ற வேலைக்காரர்களும் அந்த இளம் விதவை சொன்னதைப் பணக்காரனிடம் சொல்லினர்.
உடனே அந்தப் பணக்காரன் யோகியைச் சந்தித்து, தகவலைச் சொன்னார்.
“பார்த்தாயா... தினசரி வருமானத்திற்குக் கூலி வேலைதான் செய்ய வேண்டும்... சம்பாதித்துத் தர கணவனும் இல்லாமல் இரண்டு குழந்தைகளைக் காப்பாற்றும் பொறுப்போடும் இருக்கும் அந்தப் பெண்... இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் ஒன்றுமே இல்லை எனினும் உழைக்கும் உறுதியோடு இருக்கிறார். ஆனால் நீயோ... பதினேழாவது தலைமுறையைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய்... இதுதான் உன் வியாதி. இதை மாற்றும் மருந்து உன்னிடம்தான் இருக்கிறது...” என்றார் அந்த யோகி.
அந்தப் பணக்காரனுக்கு இப்போது நிம்மதியாக இருந்தது. வீட்டுக்குத் திரும்பினான்.