புத்தரின் சீடர்களில் முக்கியமானவர் பூர்ணா. அவர் தர்மப் பிரசாரம் செய்யப் புறப்படுவதற்கு முன்னால் புத்தரின் அனுமதியைக் கோரினார்.
உடனே அவர்கள் இருவரிடையே நடந்த உரையாடல் இதுதான்;
“பூர்ணா, எங்கேப் போய் தர்மப் பிரசாரம் செய்யப் போகிறாய்?”
“குருவே, சூனப்ராந்தம் என்ற இடத்தில்”
“அதுவா? அங்குள்ளவர்கள் கல்வியறிவு இல்லாதவர்களாயிற்றே; உன் அறிவுரைகளை ஏற்காமல் உன்னை இகழ்ந்து பேசினால் என்ன செய்வாய்?”
“அதனால் என்ன? கையால் அடிக்காமல் விட்டார்களே என்று மகிழ்ச்சியுடன் பிரசாரம் செய்வேன்”
“சரி, அப்படி கைகளால் குத்து விட்டால்?”
“அதனால் என்ன, ஆயுதங்களைக் கொண்டு தாக்கவில்லையே என்று எண்ணி மகிழ்ந்து என் தர்மப் பிரசாரத்தைத் தொடருவேன்...”
“அது சரி, ஆயுதங்களைக் கொண்டு தாக்கினால் என்ன செய்வாய்?”
“அதனால் என்ன, ஆளைக் கொல்லவில்லையே, அந்த அளவுக்கு நல்லவர்கள்தான் என்றெண்ணி என் பணியைத் தொடருவேன்; என் கடன் பணி செய்துகிடப்பதுதான்”
“சரி, அவர்கள் உன்னைக் கொன்று போட்டுவிட்டால்…?”
“மிகவும் மகிழ்ச்சியுடன் இறப்பேன்; அட இவ்வளவு சீக்கிரம் நிர்வாண நிலையை (முக்தி) அடைய உதவினார்களே! என்று அகம் மகிழ்வேன்; உளம் குளிர்வேன்” என்று பூர்ணா பதிலிறுத்தார்.
உடனே புத்தர், “பூர்ணா, உன் விருப்பப்படியே செய்; நீ முழுப்பக்குவம் பெற்றுவிட்டாய்” என்று சொல்லி பொறுமையின் சின்னமான பூர்ணாவுக்கு ஆசி வழங்கினார்.