ஒரு நாட்டு மன்னன் தன் அரன்மனையில் நாட்டியம் ஆட வந்தப் பெண்ணின் அழகில் மயங்கி அவளை அடைய ஆசைப்பட்டான்.
அப்பெண்ணோ, “மன்னா நடனம் ஆடுவது எங்கள் குலத் தொழில். நாங்கள் ஆண்டவனுக்கு தொண்டு செய்பவர்கள்” என்றாள்.
மன்னவனோ, “ஆண்டவனும் அரசனும் ஒன்றுதான், நீ என் இச்சைக்கு இணங்கத்தான் வேண்டும். நான், உன்னை இந்த நாட்டிற்கே அரசியாக்குகிறேன்” என்றான்.
அப்பெண் எவ்வளவோ வாதாடியும், மன்னன் அவளை விடுவதாக இல்லை. கடைசியில் அவளும் ஒப்புக் கொண்டாள்.
பின்னர் அப்பெண், “சரி மன்னா, நாளை தாங்கள் என் வீட்டிற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அங்கே விருந்து வைக்கிறேன்” என்றாள்.
மன்னனும் மறுநாள் அவள் வீட்டிற்குச் சென்றான்.
அப்பெண் மன்னனுக்கு 16 நிறங்களில் இனிப்புகளை விருந்தாகப் படைத்தாள்.
மன்னன், “எனக்குச் சாப்பிடப் பொறுமை இல்லை... இனிப்புகளை நீயே ஊட்டி விடு” என்றான்.
அப்பெண்ணும் மன்னனுக்கு அந்த இனிப்புகளை ஊட்டி விட்டாள்.
மன்னனும், இனிப்புகள் அனைத்தையும் சாப்பிட்டு முடித்தான்.
உடனே அப்பெண், “பதினாறு நிறத்திலான இனிப்புகளைச் சுவைத்தீர்களே ஒவ்வொன்றின் சுவையும் எப்படி இருந்தது?” என்று கேட்டாள்.
மன்னன், “நீ கொடுத்த இனிப்பில் நிறம் மட்டுமே வேறு வேறாக இருந்தது. ஆனால், அதன் சுவை ஒன்றுதான்” என்றான்.
உடனே அந்தப் பெண், “மன்னா, நாங்களும் அப்படித்தான், பெண்களின் நிறம் மட்டுமே வேறுவேறாக இருக்கிறோம். மற்றபடி அனைத்தும் ஒன்றாகவே இருக்கும்” என்றாள்.
உடனே அந்த மன்னன் அப்பெண்ணின் காலில் விழுந்து வணங்கி, “என் அறிவுக்கண்ணைத் திறந்து விட்டாய், நான் வருகிறேன்” என்று அங்கிருந்து திரும்பினேன்.