ஒரு நாட்டில் வசித்தவர்கள் சிகரெட் பிடிப்பதற்குச் சிறிது கூட ஆர்வமில்லாமல் இருந்தனர்.
ஒரு சிகரெட் தயாரிப்பு நிறுவனம், அங்கு எப்படியாவது சிகரெட் விற்பனையைச் செய்துவிட வேண்டும் என்று நினைத்தது.
அந்நாட்டில் சிகரெட் விற்பனை செய்வதற்குத் தகுந்த விற்பனைப் பிரதிநிதி தேவை என்று விளம்பரம் செய்தது.
ஆனால், அங்கு சென்று சிகரெட் விற்பனை செய்வது முடியாத செயல் என்று பலரும் அந்தப்பணிக்கு முன்வரவில்லை.
இந்நிலையில் ஒரு இளைஞன், தான் அங்கு சிகரெட் விற்பனை செய்வதுடன், அங்கிருப்பவர்களில் பலரையும் சிகரெட் பிடிக்க வைப்பதாகவும் சிகரெட் நிறுவனத்திடம் உறுதியளித்தான்.
அந்த நாட்டிலிருப்பவர்களைச் சிகரெட் பிடிக்க வைத்துவிட்டால், சிகரெட் நிறுவனத்தின் உயர்பதவியை அந்த இளைஞனுக்கு உறுதியளித்தது.
அந்த இளைஞனும் அதற்குச் சம்மதித்து, அந்த நாட்டிற்குச் சென்றான்.
தனது சிகரெட் விற்பனைக்காக, ஒரு விளம்பரத்தைச் செய்தான்.
அவன் செய்த விளம்பரம் இதுதான்.
எங்கள் நிறுவன சிகரெட் பிடித்தால், ஒன்று, திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்...! இரண்டு, உங்களுக்கு முதுமையே வராது...!! மூன்று, பெண் குழந்தை பிறக்காது..!!!
அவனுடைய விளம்பரத்தைப் பார்த்து அந்நாட்டிலிருந்த அனைவரும் சிகரெட் பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
சிகரெட் நிறுவனமும் அவனுக்கு நிறுவனத்தில் உயர் பதவியை வழங்கியது.
இந்நிலையில், அந்த நாட்டிலிருந்த சமூக ஆர்வலர் ஒருவர், பொய்யான தகவலைச் சொல்லி நாட்டிலிருப்பவர்களைச் சிகரெட் பிடிக்க வைத்துவிட்டதாகச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொய்யான தகவலளித்த அந்த இளைஞனுக்குக் கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று அந்த வழக்கில் சமூக ஆர்வலர் கோரியிருந்தார்.
உச்சநீதிமன்றத்தின் முன் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
சிகரெட் விற்பனை பிரதிநிதியாக இருந்து உயர்பதவி பெற்ற அந்த இளைஞன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிபதி அவரிடம், “பொய்யான கருத்துகளைச் சொல்லி விளம்பரம் செய்து சிகரெட் விற்பனையைச் செய்திருக்குறாயே...? பொய்யான தகவலுக்குத் தண்டனை உண்டு என்பது உனக்குத் தெரியாதா...?” என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞன் சொன்னான், என் தகவல் எதுவும் பொய்யில்லை என்றான்.
“திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்...” என்று சொல்லியிருக்கிறாயே... அது தவறில்லையா?” என்று நீதிபது அவனிடம் கேட்டார்.
“உண்மைதானய்யா... திருடன் சிகரெட் பிடிப்பவர்கள் வீட்டுக்கு வரமாட்டான்... அவர்கள் எப்பொழுது சிகரெட் பிடிக்க ஆரம்பித்தார்களோ... அப்பொழுதே அவர்களுக்கு இருமல் தொடங்கி விடும்... இருமிக் கொண்டே இருப்பதால் அவர்களுக்குத் தூக்கம் வராது. வீட்டில் யாரோ விழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்...” என்றான் அந்த இளைஞன்.
“முதுமையே வராது...” என்று சொல்லியிருக்கிறாயே... என்றார் நீதிபதி.
அதற்கு அந்த இளைஞன், “நீதிபதி ஐயா, சிகரெட் பிடிக்கத் தொடங்கிவிட்டாலே, இளமையிலேயேச் செத்துப் போய்விடுவார்கள்... அவர்களுக்கு முதுமை எப்படி வரும்...?” என்றான்.
“பெண் குழந்தை பிறக்காது...” என்று வேறு சொல்லியிருக்கிறாயே... என்றார் நீதிபதி.
“சிகரெட்டில் நிக்கோடின் எனும் நச்சுத்தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும். மேலும், சிகரெட் பிடிக்கு ஆணிடம் பெண்கள் சேர்வது குறைந்துவிடும். அவர்களுக்குக் குழந்தைப்பேறு இருக்காது. இதில் ஆண் என்ன? பெண் என்ன? குழந்தையேப் பிறக்காது...” என்றான்.
“அவன் சொன்னது அனைத்தும் உண்மைதான். எந்தவொரு செய்தியையும் முழுமையாக ஆராய்ந்து அதன் பின் முடிவெடுக்க வேண்டும். நாம்தான் நல்லது எது? கெட்டது எது? என்று யோசித்து முடிவு எடுக்க வேண்டும்” என்று சொல்லிய நீதிபதி, அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
கவர்ச்சியான விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமலிருக்க வேண்டும்.