ஒரு துறவியை சில மக்கள் சந்திக்கச் சென்றனர்.
அவர்கள் துறவியின் வீட்டை அடைந்தவுடன் துறவி அவர்களைப் பார்த்து வாருங்கள் எல்லாருமேத் தொலைவிலிருந்து வருவது போலத் தெரிகிறது அனைவரும் உள்ளே வந்து ஓய்வெடுங்கள் என்றார்.
வந்தவர்கள், “இல்லை குருவே, நாங்கள் இங்கேயேப் பேசிக்கொண்டு இருக்கிறோம்” என்று வெளியிலேயே அமர்ந்தனர். அப்போது, அவர்களுக்குள் மாயைப் பற்றிய பேச்சு எழுந்தது.
“இந்த உலகத்தில் மனிதர்கள், பொருட்கள் இதெல்லாம் நிஜமா இருக்கிறதா? அல்லது நமது மனம் செய்யும் வேலைதானா” என்று பேசினார்கள்.
அதைக் கேட்ட துறவி அவர்களிடம், “உலகத்தில் நிறைய மக்கள் கவலையை நினைத்தே வாழுகிறார்களே, உண்மையா ?” என்று கேட்டார்.
வந்தவர்கள், “ இல்லை குருவே, அதுவும் மாயைதான்” என்றார்கள்.
“அப்படியென்றால் நீங்கள் ஏன், பல கவலைகளை சுமந்து கொண்டு என்னிடம் வந்தீர்கள்? இதெல்லாம் மாயை என்று தெரிந்தும் சுமந்து கொண்டே இருந்தால் உங்களால் எப்படி நிம்மதியாக வாழமுடியும்? முதலில் கவலைகளை இறக்கி வையுங்கள். இங்கே இருப்பவர்களில் நிறைய பேர் கவலையுடன் இருப்பதை என்னால் பார்க்கமுடிகிறது அவர்களுக்கு நான் சொல்வது இதுதான். நீங்கள் உண்மையில் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் உங்கள் மனதில் பல வருடமாகச் சுமந்து கொண்டிருக்கும் கவலை என்ற பெரிய கல்லை தூக்கியெறியுங்கள்... கவலையை இறக்கி வைத்து யோசியுங்கள்... என்னைப்போன்ற துறவியின் ஆலோசனை உங்களுக்குத் தேவைப்படாது” என்று சொல்லி அனுப்பினார்.
அவர்களும் தங்கள் கவலைகளை அங்கேயே இறக்கிவிட்டுச் சந்தோசமாக வீட்டிற்குச் சென்றார்கள்.