ஒரு பெரிய வீட்டில் ஆடு, மாடு, நாய்கள் இருப்பதை அருகில் சிறிய வீட்டில் இருக்கும் ஒரு குட்டி எலி கவனித்து வந்தது.
அதற்கு நீண்ட நாட்கள் ஆசை, அதாவது இந்த விலங்குகள் எல்லாம் பெரிய வீட்டில் வசதியாக ஆடிப் பாடித் திரிகிறதே... ஆனால் நமக்கு மட்டும் வீடு அப்படி இல்லாமல் மிகவும் சிறியதாக இருக்கிறதே என்று.
இங்கே நம் வீட்டில் ஓடி, ஆட இடமே இல்லையே என்று மிகவும் வருத்தம்.
ஒரு நாள் தன்னுடைய தாயிடம், “அம்மா, ஏன் நமக்கு மட்டும் இப்படி ஒரு படைப்பு நமக்கும் பெரிய வீடு இருந்தால் நாமும் மற்ற விலங்குகள் போல சந்தோசமாக இருக்கலாம் அல்லவா? ” என்று கேட்டது.
அதற்குத் தாய் எலி அமைதியாக, இதற்கான காரணத்தை நீயே விரைவில் உணர்ந்து கொள்வாய் என்று கூறியது.
இப்படியேச் சில நாட்கள் போனது.
ஒருநாள் அந்தக் குட்டி எலி வெளியேச் சுற்றித் திரியும் போது, அந்த வழியாக வந்த பூனை அதைப் பார்த்துத் துரத்த ஆரம்பித்தது.
உடனே உயிர் பயத்தில் அந்தக் குட்டி எலி அந்தப் பெரிய பங்களாவின் தோட்டத்தில் போனது, அங்கேயும் அந்தப் பூனை விடவில்லை.
மீண்டும் விடாப்பிடியாகத் துரத்தியது கடைசியில் அந்தக் குட்டி எலி தன்னுடைய சிறிய வீட்டிற்குள்ளேப் புகுந்தது.
இப்போது, அந்தப் பூனையால் உள்ளே நுழைய முடியாமல் ஏமாந்து திரும்பிச் சென்றது.
அதைக் கண்ட அந்தத் தாய் எலி கூறியது,
“இப்போது இந்தச் சிறிய வீட்டின் அருமை புரிகிறதா? எதையும் அதன் அருமை புரியாமல் ஏளனமாகப் பார்க்கக் கூடாது. இந்தச் சிறிய வீடு இல்லையென்றால் இன்று நீ உயிரோடு இருக்கமாட்டாய்”
அதை உணர்ந்த அந்த குட்டி எலியும் தன் ஆசைகளைக் குறைத்து சிறிய வீட்டிலே மகிழ்ச்சியோடு வாழ முடிவு செய்தது.