ஒரு அழகான குருவியை எமதர்மராஜா வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தார்.
எமதர்மராஜாவின் பார்வை ஒரு உயிரின் மேல் பட்டால் என்ன நடக்கும்? கட்டாயம் மரணம்தான்.
இந்தச் சம்பவத்தை பார்த்த கருட பகவானுக்கு பயம் வந்துவிட்டது. அந்தக் குருவிக்குக் கெட்ட நேரம் இருப்பதை உணர்ந்த கருட பகவான், குருவியை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடவேண்டும் என்று எண்ணினார்.
அந்தக் குருவியை தூக்கிக் கொண்டுபோய் பல மைல் தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு பொந்தில் மறைத்து வைத்தார். ஆனால் அங்கிருந்த ஒரு பாம்பு, உடனே அந்தக் குருவியை விழுங்கிவிட்டது.
காப்பாற்ற வேண்டும் என்ற நினைத்த குருவியை நானே கொன்று விட்டேனே! என்ற கவலையில் கருட பகவான், குருவி இருந்த பழைய இடத்திற்கே வந்து எமதர்மராஜாவைச் சந்தித்தார்.
எமதர்மராஜா கருடரை உற்றுப் பார்த்தார்.
எமதர்ம ராஜாவிடம் கருடர், “நான் விஷ்ணு பகவானின் வாகனமாக இருப்பவன். அவரை முதுகில் சுமந்து செல்லும் என்னை உன்னால் எதுவும் செய்துவிட முடியாது” என்று சொன்னார்.
அதைக்கேட்ட எமதர்மராஜா, “கருடரே! நீங்கள் என்னைத் தவறாக புரிந்து இருக்கிறீர்கள். அந்தக் குருவியை நான் உற்றுநோக்க காரணம், சில நொடிகளில் பல்லாயிரம் மைல்களுக்கு அந்தப்பக்கம் வசிக்கும் ஒரு பாம்பின் வாயால் இந்த குருவியானது இறக்க நேரிடும் என்று விதியால் எழுதப்பட்டிருந்தது. அது எப்படி நிகழப் போகிறது? என்பதைத்தான் நான் யோசித்துக் கொண்டிருந்தேன்” என்றார்.
அதைக்கேட்ட கருடபகவான் திகைப்பில் ஆழ்ந்தார். ஒருவருக்கு விதிப்படி மரணம் எப்போது நிகழுமோ அப்போது கட்டாயமாக நிகழத்தான் போகிறது.