தினக்கூலி செய்யும் ஐயனார் பக்தன் ஒருவன் இருந்தான்.
அவனை வறுமை எனும் நோய் மிகவும் வாட்டியது. ஒருநாள் எப்போதும் போல ஒரு வீட்டுக்கு வேலை செய்ய அவன் ஒப்புக் கொண்டான்.
அதன் பொருட்டு பத்து ரூபாய் கூலியும் பேசிவிட்டு வந்தான். மறுநாள் ஒரு இருண்ட தோப்பின் வழியே வேலைக்குப் புறப்பட்டான்.
அந்தத் தோப்பின் நடுவே ஒரு ஐயனார் சிலை. தினமும் அவ்வழியே செல்லும்போது ஐயனாரை அவன் வணங்குவது வழக்கம்.
அன்றும் அவ்விடம் வந்தவுடன் அவனும் சாமி கும்பிட்டான்.
திடீரென்று " பக்தனே, இங்கே வா " என்று ஐயனார் அழைத்தார்.
அவனும் பயம் கலந்த மகிழ்ச்சியுடன் அருகில் சென்றான்.
உடனே ஐயனார் " பக்தா, நீ பயப்படவேண்டாம், நீ நிற்கும் இடத்தில் தோண்டிப்பார், இரு மண் பானை இருக்கும், அதில் தங்கக் காசுகள் இருக்கும், அவை உனக்குத்தான், ஆனால் பானையைக் சுத்தமாகக் காலி செய்யாதே, அதில் நாலு தங்கக் காசுகளைப் போட்டு வை " என்றார்.
அவனும் அவ்வாறேத் தோண்டி, தங்கக் காசுகள் நிறைந்த ஒரு மண் பானையை எடுத்தான். வேண்டா வெறுப்பாக அதில் நாலு தங்கக் காசுகளைப் போட்டு வைத்துவிட்டு மீதியைத் தன் மேல் துண்டில் கட்டிக்கொண்டு, ஐயனாருக்கு நன்றி சொல்லிவிட்டு வேலைக்குப் புறப்பட்டான்.
வேலை செய்ய வேண்டிய வீட்டை அடைந்த பச்சமுத்து தலையில் இருந்த மூட்டையை உத்தரத்தில் கட்டித் தொங்கவிட்டான். இனி இத்தொழிலிற்கு முழுக்குப் போட்டுவிட்டு உல்லாச வாழ்க்கைவாழ வேண்டியதுதான் என்று கற்பனையில் மிதந்தான்.
அந்த வீட்டுப் பெண்மணி சமையல் செய்ய ஆரம்பித்தாள், குடுவையில் துவரம்பருப்பு காலி, கடைக்குச் சென்று வாங்கி வர சோம்பேறித்தனம்.
உடனே அவள், " பச்சமுத்து, உத்தரத்தில் தொங்கும் மூட்டையில் என்ன இருக்கிறது? " என்று கேட்டாள்.
அவனே வீட்டிற்குத் துவரம்பருப்பு வாங்கிப் போகிறேன் என்று பொய் சொன்னான்.
உடனே அவசரத்திற்கு நல்லதாயிற்று என்று நினைத்த அவ்வீட்டுக்காரி மூட்டையைப் பிரித்தாள்.
“ஆஹா, என்ன பேரானந்தம், நான் வணங்கும் தெய்வம் என்னைக் கைவிடவில்லை. கொத்தனார் கண்ணிற்குத் துவரம்பருப்பாகத் தெரிவது என் கண்ணிற்கு தங்கக் காசுகளாகத் தெரிகிறது. சரி” என்று தீர்மானித்து அனைத்தையும் உள்ளே ஒரு இடத்தில் பதுக்கி வைத்து விட்டு அருகில் உள்ள மளிகைக் கடையில் அதே அளவிற்குத் துவரம் பருப்பை வாங்கி மூட்டை கட்டித் தொங்க விட்டாள்.
மாலையில் வேலை முடிந்தவுடன் மூட்டையைப் பிரித்த பச்சமுத்துவிற்கு தலையில் இடி, மூட்டையில் அத்தனையும் துவரம் பருப்பு.
உடனே வீட்டுக்காரப் பெண்மணியிடம், "இந்த மூட்டையில் தங்கக் காசுகள் வைத்திருந்தேன் அவை எங்கே?" என்று கேட்டான்.
அதற்கு அவள், "என்னது தங்கமா? என்ன உளறுகிறாய் ஏதாவது கனவு கண்டாயா?" என்றாள்.
பஞ்சாயத்திற்குப் போனது, பஞ்சாயத்தாரும் பெண்மணியிடம் வினவ அவளோ, "அவன் தங்கக் காசுகள் வைத்திருந்தால் என் வீட்டிற்கு வேலைக்கு அதுவும் பத்து ரூபாய் கூலிக்கு ஏன் வரவேண்டும்?" என்று ஒரு போடு போட்டாள்.
பஞ்சாயத்தாரும் வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.
அவன் நேராக ஐயனார் சிலை இருக்கும் இடம் சென்று, "ஐயனாரப்பா, உன் பக்தனை இப்படி நீ மோசம் செய்யலாமா?" எனக் கதறி அழுதான்.
அதற்கு ஐயனார், "யார் யாருக்கு என்னென்ன எப்போது கிடைக்க வேண்டுமோ அப்படியே ஏற்பாடு செய்தேன். நீ போன பிறப்பில் அப்பெண்ணின் தங்கக் காசுகளை திருடிவிட்டாய், அதனால் இப்பிறப்பில் நீயே அதை அவளிடம் சேர்க்கும்படி செய்தேன், உன் பாவம் கழிந்தது. அதற்குக் கூலியாய் நீயே நாலு தங்கக் காசுகளை உன் பானையில் போட்டு வைத்தாயே அதை எடுத்துச் செல்" என்றார்.
அதைக்கேட்ட அவன், வேண்டா வெறுப்பாக நாம் போட்ட அந்த நாலு காசுகள்தான் இப்போது நமக்கு உரிய சொத்தாகிறது. நம் பேராசையால் பெரும் சொத்தை விட்டுவிட்டோமே என நினைத்துத் தன்னை ஆறுதல் செய்து கொண்டான்.