ஒரு நாள் ஒரு குயவன் தன்னிடம் இருந்த சால், பானை, சட்டி, தோண்டி, குடம், சாடி, தொட்டி முதலிய மட்பாண்டப் பொருட்களை விற்பதற்காகக் கடைத்தெருவிற்குக் கொண்டு வந்து வைத்திருந்தான். அவைகளில் சாடியானது, மற்ற பாத்திரங்களைப் பார்க்கிலும் அழகாயும், மினுமினுப்பாயும் இருந்தது.
அதனால் அது ஏனைய பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியேப் பார்த்து "நீ , ஒரு தாழ்ந்த சாதிப் பயல், நீ மிகவும் கேவலமானவன், ஏழை எளியவர் வீட்டிலேயே வசிப்பாய், அவர்கள் உன்னைக் கௌரவமாகப் போற்றி வாழாமல் இழிவாகவும், அலட்சியமாகவும் உபயோகிப்பார்கள். ஆனால் "நானோ! அப்படியல்ல... உயர்ந்த சாதி உடையவன், பிரபுக்கள் வீட்டிலேயே வசிப்பேன், என்மேல் மல்லிகை, முல்லை, ரோஜா முதலிய மலர்கள், உயர்ந்த பொருட்களையும் வைப்பார்கள். நான் உயர்ந்த நிலையில் பொன் போல் போற்றப்படுவேன். ஆகையால் உன்னைக் காட்டிலும் நான் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தவன்" என்று இகழ்ந்தது.
அதனைக் கேட்ட பக்கத்தில் இருந்த சட்டியானது மனம் வருந்தியது. பின்பு, "அடே, மூடா! நாம் இருவரும் ஒரே குழியில் இருந்து எடுத்த மண்தான், ஒரே குயவனுடைய கை வேலைதான். ஒருநாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் நாம் இருவரும், நம் இனத்தார்களும் உடைந்து போவது நிச்சயம். அப்போது நம்மை வெளியில் தூக்கி எறிந்து விடுவார்கள். அப்போது பல பேர் கால்களில் மிதிபட்டு, மண்ணோடு மண்ணாகிப் புதைந்து கிடப்போம். குயவனுக்கு இஷ்டம் இருந்து இருக்குமேயானால் என்னை உன்னைப் போலவும், உன்னை என்னைப் போலவும் தயாரித்திருக்கக் கூடும். அப்போது நீ ஒரு சட்டி ஆகவும், நான் ஒரு சாடி ஆகவும் இருந்திருப்பேன். ஆகையால் ஆராய்ந்து பாராமல் பெருமை பேச உனக்கு எப்படி வாய் வந்தது?” என்று கூறியது.
சாடியோ பதில் கூற முடியாமல் அடங்கிற்று.
அதுபோல, இறைவன் மனிதர்களைப் பல நிறங்களில் படைத்திருக்க... சிலர் தாங்களாகவே, 'தன்' பெருமை சொல்லி தன்னை உயர்ந்தவர் என்றும், பிறரைத் தாழ்ந்தவர் என்றும் பேசிக்கொள்வது எவ்வளவு பெரிய மூடத்தனம்?