ஞானி ஒருவரைச் சந்தித்த மன்னன், தன் நாட்டையும் செல்வத்தையும் குறித்து மிகவும் கர்வமாகப் பேசினான்.
ஞானி, ''நீங்கள் ஒரு பாலைவனத்தில் கடுமையான தாகத்தோடு போகும்போது, ஒருவன் அழுக்குத் தண்ணீருடன் வந்து அதைக் கொடுக்க பாதி நாட்டைக் கேட்டால் என்ன செய்வீர்கள்?'' எனக் கேட்டார்.
அரசன், ''சந்தேகம் என்ன? தண்ணீரை வாங்கிக் கொண்டு பாதி நாட்டைக் கொடுப்பேன்!'' என்றான்.
ஞானி, ''சரி, அந்த அழுக்குத் தண்ணீரைக் குடித்ததால் யாராலும் குணப்படுத்த முடியாத நோய் உமக்கு வந்து விடுகிறது. ஒருவர் அதைக் குணப்படுத்தும் மூலிகைக்கு ஈடாக மீதி நாட்டைக் கேட்டால் கொடுப்பீர்களா?” என்று கேட்டார்.
உடனே அரசன், ''நிச்சயம் வாங்குவேன்!'' என்றான்.
''ஒரு பாத்திர அழுக்கு நீரும், ஒரு மூலிகைச் செடியுமே பெறுமானமுள்ள உங்கள் நாட்டைக் குறித்து உங்களுக்கு ஏன் கர்வம்?'' என்று ஞானி கேட்க, அரசன் தலை குனிந்தான்.