விஜயநகரத்தை அடுத்துள்ள நதிக்கு நீராடச் சென்ற இராஜகுருவான தாத்தாச்சாரியார் தம் ஆடைகள் அனைத்தையும் களைந்து ஆற்றங்கரையில் வைத்துவிட்டு ஆற்றில் இறங்கி ஆனந்தமாகக் குளித்துக் கொண்டிருந்தார்.
அதனைக் கண்ட தெனாலிராமன் தனக்கு உதவி செய்ய மறுத்த இராஜகுருவைப் பழிவாங்கி அவமானப்படுத்த இதுவே தக்க சமயம் என்று நினைத்து ஆற்றங்கரையிலுள்ள அவருடைய ஆடைகள் அனைத்தையும் சுற்றியெடுத்துக் கொண்டு கிளம்பத் தயாரானான்.
அதை கண்டு திடுக்கிட்ட இராஜகுரு, ஆற்று நீரைவிட்டு இடுப்பளவிற்கு மேல் எழுந்திருக்க முடியாமல், “ராமா என் ஆடைளைக் கொடுத்து விடு!” என்று கெஞ்சித் திண்டாடிக் கதறினார்.
தெனாலிராமனோ, “உம்முடைய ஆடைகளை இப்போது நான் திருப்பித் தர வேண்டுமானால், கன்னிப் பெண்கள் வரக்கூடிய இந்த ஆற்றில் நீர் இப்படிக் குளித்தக் குற்றத்தை வெளிப்படுத்தாமல் மறைக்க வேண்டுமானால், என்னை உம் தோள் மீது சுமந்து கொண்டு இராஜவீதி வழியாகப் பவனி செல்வதாக நீர் சத்தியம் செய்ய வேண்டும்” என்றான்.
அதன் பிறகு, இராஜகுரு வேறு வழியின்றி அவ்வாறே, தெனாலிராமனை சுமந்து கொண்டு இராஜவீதி வழியாக நடந்தார்.
அதை அரண்மனை மேல்மாடத்திலிருந்து கவனித்த அரசர்.
தம் நாட்டில் ஒருவன் தோள் மீது மற்றொருவன் ஏறி வருவதா? என்று கோபம் கொண்டு காவலாளிகளைக் கூப்பிட்டு, “தோள் மீது ஏறி உட்கார்ந்து வருபவனை நையப் புடைத்து என் முன் அழைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டு அப்பினார்.
அரசர் தங்களைக் கண்டுவிட்டார் என்பதை ஊகித்துணர்ந்த தெனாலிராமன், உடனே அரசகுருவின் தோளை விட்டிறங்கி அவரின் கால்களில் விழுந்து தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கேட்டு, அதற்குப் பரிகாரமாகத் தன் தோள்களில் இராஜகுருவைச் சுமந்து கொண்டு நடக்கலானான்.
அவனுக்குப் புத்தி வந்து விட்டது என்று நினைத்த இராஜகுரு அவனுடைய தோள் மீது அகம்பாவத்துடன் அமர்ந்து சென்றார்.
அச்சமயம் அங்கு வந்த காவலாளிகள், அரசரின் உத்தரவுப்படி இராஜகுருவை நன்றாக அடித்து நையப்புடைத்து அரசர் முன் கொண்டு போய் நிறுத்தினர்.
இராஜகுரு உடனே இராயரை நோக்கி, “அரசே ! தெனாலிராமன் என்னை ஏமாற்றிவிட்டான். தெனாலிராமன் வழியில் சாகப்போவது போல் கிடந்தான். நான் இரக்கப்பட்டு என்னவென்று கேட்டேன். தனக்கு மயக்கமாக இருப்பதாகவும் நடக்கமுடியவில்லை என்றும் கூறினான். அதனால் அவனை என் தோளின் மீது சுமந்து வந்தேன். அரண்மனை அருகில் வந்தவுடன், அவனே வலிய என்னை அவனது தோளின் மீது ஏற்றிக் கொண்டான்!” என்று பொய்யையும், மெய்யையும் கலந்து கூறினார்.
இராயருக்குச் சிரிப்பு வந்தாலும், தம் இராஜகுருவை அவமதித்து, தம் ஆட்களைக் கொண்டே அடிக்கும்படியும் செய்துவிட்டானே என்று தெனாலிராமன் மீது உள்ளூர ஆத்திரமும் ஏற்பட்டது.