நாங்கள் நன்றாக அலங்கரிக்கப்பட்டு அவரவர் இடத்தில் இருப்போம். எங்களைப் பார்க்க யாரவது வருவார்கள். எங்களில் இருந்து யாரையாவது பிடித்து விட்டால் அவர்களிடம் போய் விடுவார்கள். போகிறவர்கள் எங்களிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு மௌனமாய் போவார்கள்.
அன்று நான் மிகவும் ஏங்கிய வண்ணம் இருந்தேன். வாசலில் ஆஜானுபாகுவாய் சிவந்த நிறத்துடன் ஒருவர் வந்தார். கண்களை எங்கள் மேல் ஓட விட்டார். நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அழகு. வேவ்வேறு திறமை உள்ளவர்கள். யார் யாரைக் கவருவோம் என்பது நேரம் அல்லது வருவோரின் தேவையைப் பொறுத்தது. பொதுவாக நாங்கள் மயக்குவோம். மற்றவர்கள் மயங்குவார்கள்.
இன்று வந்தவர் சாதுர்யமான பேச்சாற்றல் உள்ளவர் போலும். சிரித்த முகம். நெற்றியில் வெண்ணீறு அணிந்து, நடுவில் சந்தனப் பொட்டு. அழகாய் பார்ப்பவர்க்கு அசந்து போகும் ஒரு முகம். அவர் பார்வை என் மீது பட நான் இறைவனை வேண்டினேன். என் முனகல் சத்தம் உங்களுக்கு கேட்க நியாயமில்லை.
என் பிரார்த்தனை வீண் போகவில்லை. அந்த மனிதர் என்னை நோக்கி வந்தார். என்னை ஏற இறங்கப் பார்த்தார். லேசாக விரல் நுனியால் தொட்டார். என் நளின நரம்புகள்; சிலிர்க்க லேசாக வெட்கத்தில் முனகினேன். அதை ரசித்த வண்ணம் எங்கள் போஷகரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பணம் கைமாற அவர் வந்த ஆட்டோவில் அவருடன் பயணமானேன்.
வழியில் தொடாமலே மலரந்தேன். பள்ள மேடுகள் காரணமாக அதிர்வு தாளாமல் நான் சரிய அவர் என்னை லாவகமாய் பிடிக்க என் உள்ளுக்குள் ஓராயிரம் கீதம்.
நான் என் புதிய வாழ்க்கையைப் புதிய இடத்தில் தொடங்கப் போகிறேன்.
அவர் என்னை அணைத்துக் கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றார். அங்கிருந்த ஊஞ்சலில் என்னைக் கிடத்தினார்.
வீட்டீல் பெரியவர் சிறியவர் எல்லோரும் என்னை விசித்திரமாய்ப் பார்த்தார்கள்.
எனக்கோ பயமும் கூச்சமும்.
“அம்மா” என்றார்.
அப்போது அந்த வயதான பெண்மணி எனக்கும் மஞ்சள் குங்குமம் இட்டு. “ராசகோபாலா ஹம்சத்தொனியில் பிள்ளையார் கீதம் வாசிடா இந்த வீணையில்” என்றார்.
அவ்வளவுதான் அவர் என்னை மடியில் கிடத்திக் கொண்டு ஆனந்தமாய் என்னை வருட நான் இசையாய் மழை பொழியத் தொடங்கினேன்.
என் இசையில் அந்த வீடு பக்தியுடன் மகிழ்ச்சியில் மூழ்கியது.
கடையில் பார்வைப் பொருளாய் அவ்வப்போது சிலரின் சீண்டலுக்கு உள்ளான எனக்கும் இப்போது மகிழ்ச்சிதான். நம்மாலும் நாலு பேரை மகிழ்ச்சி அடையச் செய்ய முடிகிறது.