ஒரு நாள் செய்யதுனா ஈஸா (அலைஹிஸலாம்) அவர்கள் ஒரு மலை மீது ஏறிச் சென்றார்கள்.
அங்கு ஒருவர் வெயிலில் தொழுது கொண்டு இருப்பதைக் கண்டார்.
அவர் தொழுததும் அவரிடம் சென்று, "தாங்கள் வெயிலையும் மழையையும் விட்டுத் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரு வீட்டை அமைத்துக் கொள்ளக்கூடாதா?" என்று கேட்டார்.
அதற்கு அவர் "இறைவனின் தூதரே, நான் எழுநூறு வயதுக்கு மேல் வாழமாட்டேன் என்று பல நபிமார்கள் என்னிடம் கூறி உள்ளனர். இத்தனை குறைந்த வயதைப் பெற்றுள்ள நான் வீட்டைக் கட்டுவதில் என் வாழ்நாளைச் செலவு செய்ய விரும்பவில்லை" என்று கூறினார்.
அப்போது ஸெய்யதுனா ஈஸா (அலைஹிஸலாம்) அவர்கள், அவரை நோக்கி "இதை விட ஆச்சர்யமான ஒரு தகவலைச் சொல்லவா? என்று கேட்டார்.
"என்ன அது" என்று வியப்புடன் கேட்டார் அந்த மனிதர்.
"உலகின் இறுதிக் காலத்தில் தோன்றும் மனிதர்கள் நூறு வயது கூட வாழ மாட்டார்கள். ஆனால், அவர்களோ ஆயிரம் வருடங்கள் வாழ்வது போல் எண்ணிக்கொண்டு மாட மாளிகைகளையும் கூட கோபுரங்களையும் கட்டுவதில் தமது வாழ்நாளைச் செலவு செய்வார்கள்" என்றார்.
அப்போது அந்த மனிதர் "அச்சமயம் நான் உயிரோடு இருப்பின் நான் என் வாழ்நாளை ஒரே சஜ்தாவில் கழித்து விடுவேன்" என்று கூறினார்.