புத்தரின் அதி அற்புதமான கொள்கைகளால் ஈர்க்கப்படாதவர்கள் எவரும் இல்லை. அந்த வகையில் புத்தரின் சீடராக ஒரு இளம்பெண் சேர்ந்தாள். அவள் அழகில் சிறந்தவளாக இருந்தாள். பக்தியிலும், புத்தரின் மீதான பற்றிலும் சிறந்து விளங்கிய அந்தப் பெண்ணிடம், தன் அழகு மீதான கர்வம் மட்டும் பெரும் குறையாக இருந்து வந்தது.
அதை அவ்வப்போது புத்தரும் கவனித்து வந்தார்.
ஒரு நாள், புத்தர் தன்னுடைய சக்தியின் மூலமாக ஒரு இளம்பெண்ணை உருவாக்கினார்.
அந்த மாயப்பெண், புத்தரிடம் சீடராக இருந்த பெண்ணைக் காட்டிலும் பன்மடங்கு அழகு கொண்டவளாக இருந்தாள். அதைக் கண்டு சீடப்பெண்ணுக்கு பொறாமையாகக் கூட இருந்தது.
‘இப்படி ஒரு அழகானப் பெண் இருக்கிறாளா... இவர் நம்மை விடவும் பல மடங்கு பதுமை போல காணப்படுகிறாளே...’ என்று நினைத்தாள்.
அப்போது கூட அவளுக்கு அழகின் மீதான பற்று குறையவில்லை.
அந்த மாயப்பெண்ணை பொறாமைக்கண் கொண்டு சீடப் பெண் பார்த்துக் கொண்டிருந்த அதே வேளையில், மாயப் பெண் கொஞ்சம் கொஞ்சமாக வயோதிகத்தை அடைந்தாள். அவளது தேகம் முழுவதும் தோல் சுருங்கியது. தலைமுடி நரைத்தது, கூன் விழுந்தது. உடலில் பல நோய்கள் உண்டாகிப் பார்க்கவே அவலட்சணமாக மாறிவிட்டாள்.
அதிர்ச்சி அடைந்த புத்தரின் சீடப் பெண், ‘எப்படிப்பட்ட பேரழகியாக இருந்தவள், சிறிது நேரத்தில் இப்படி ஒரு அவலட்சணமாக மாறிவிட்டாளே’ என்று நினைத்தவளுக்கு, அழகு என்பது நிரந்தரமானது இல்லை என்ற எண்ணம் தெளிவுபடத் தொடங்கியது.
அப்போது அங்கு வந்த புத்தர், “உன் மனதில் இப்போது நீ நினைப்பதுதான் நூறு சதவீதம் உண்மையானது. அழகு என்பது நிரந்தரம் இல்லை. அவ்வளவு ஏன்...? இந்த உலகமும், அதில் ஒருவருக்கு கிடைக்கும் செல்வமும், சுற்றமும் கூட நிலையானவை கிடையாது. எனவே நிலையற்ற எந்த ஒரு பொருளின் மீதும் தற்பெருமை கொள்வது வீணானது” என்றார்.
அந்த சீடப் பெண்ணும், தனது அறியாமையைப் போக்கிய புத்தரை பணிந்து வணங்கினாள்.