குளத்தின் கரையோரமாக நீரில் மிதந்தபடியிருந்த தவளையைக் கெளுத்தி மீனொன்று தற்செயலாகக் கண்டது.
அது தவளையிடம் “தவளையாரே, என்ன செய்கிறீர்கள்?” என்று பேச்சுக் கொடுத்தது.
“நானென்ன செய்கிறேனென்று உனக்குப் பார்த்தால் தெரியவில்லையா?” என்று செருக்குடன் உரத்த குரலில் உறுமியது தவளை.
“தெரியுது, ஒரு பேச்சுக்காகக் கேட்டேன்” என்று சொல்லியபடி பயத்துடன் ஓரடி பின்வாங்கியது அந்தக் கெளுத்தி மீன்.
“அட முட்டாளே, உன்னைப்போல் நானில்லை. நீ நீர் ஒன்றை மட்டுமே நம்பி வாழுகிறாய். நான் நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். இந்த நீரைத் தவிர்த்து, வெளியுலகம் உனக்குத் தெரியாது. நான் அனைத்தும் அறிந்தவன்” என்று அகங்காரத்துடன் பதில் சொன்னது.
அத்தோடு நிற்காமல், தன்னை யாரென்று இங்கு இருக்கும் மீன்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்று சொல்லியபடி தண்ணீரில் மேலும் கீழுமாகக் குதிக்கத் தொடங்கியது.
அப்போது, திடீரெனப் பாய்ந்து வந்த ஒரு கொக்கு, அந்தத் தவளையை கவ்விச் சென்றது.
தானே பெரியவன் என்று சொன்னது மட்டுமின்றி, மேலும் கீழுமாகக் குதித்த தவளை, இப்படி கொக்குக்கு இரையாகிப் போய்விட்டதே என்று நினைத்து வருந்தியபடி, நடுக்குளத்தை நோக்கி நகர்ந்து சென்றது அந்தக் கெளுத்தி மீன்.